ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம், தொடர்களுக்கு கட்டுப்பாடுகள்; வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம், தொடர்களுக்கு கட்டுப்பாடுகள்; வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
Updated on
1 min read

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து ஓடிடி எனப்படும் ஆன்-லைன் தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்கள் ஆபாசமாக உள்ளதாக ஒரு தரப்பினர் புகார் செய்து வருகின்றனர். ஓடிடியில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்னர்.

இந்நிலையில் இதுகுறித்து மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. ஓடிடி தளங்கள், டிஜிட்டல் செய்தித்தாள்கள் போன்றவை பிரஸ் கவுன்சில் சட்டத்திலோ, டெலிவிஷன் நெட்வொர்க் சட்டத்திலோ, தணிக்கைக் குழுவின் கீழோ வருவதில்லை. எனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், அமேசான் பிரைமில் வெளியான ‘தாண்டவ்' என்ற வெப் தொடர் இந்து மதக் கடவுளை இழிவுபடுத்துவதாக உள்ளதால் அதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அமேசான் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in