

கரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில், அதிமுக கொடியுடன் வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவின் உறவினர்கள் அவருக்கு சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதால் 21-ம் தேதி உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சசிகலாவுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்துதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப் பட்டார். 10 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிசிச்சையால் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரின் தண்டனைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து 27-ம் தேதிமருத்துவமனையில் இருந்த நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 6 நாட்களாக சசிகலாவுக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லா மல், நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்ஸிஜன் அளவு ஆகியவை சீராக இருந்தது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவரை 31-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்ய முடிவெடுத்தது.
ஜெயலலிதாவின் ராசியான கார்
நேற்று பகல் 12 மணியளவில் கரோனாவார்டில் இருந்து சக்கர நாற்காலி மூலம்சசிகலா முகக் கவசம், கை உறை அணிந்த நிலையில் வெளியே கொண்டுவரப்பட்டார். மருத்துவர்களின் உதவியுடன் எழுந்து நடந்த சசிகலா சில நிமிடங்கள் அவரது உறவினர் டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் டிஎன் 09 பிஎக்ஸ் 3737 என்ற பதிவு எண் கொண்ட காரில் ஏறி கைக்கூப்பி வணங்கியவாறு வெளியே வந்தார்.
விக்டோரியா மருத்துவமனை வாசலில் காத்திருந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சசிகலாவை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். சசிகலாவின் கார் மீது பூக்களையும், துளசி இலைகளையும் தூவி உற்சாகமாக வரவேற்றனர். சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்க சென்ற சசிகலாவுக்கு ஆங்காங்கே தொண்டர்கள் பூசணிக்காயை உடைத்து திருஷ்டி கழித்தனர்.
அங்கிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சென்ற சசிகலாவை ஆதரவாளர்கள் காரில் பின்தொடர்ந்து சென்றனர். மருத்துவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளதால், சசிகலா அடுத்த ஒரு வார காலம் அங்கு தங்க முடிவெடுத்துள்ளார். அவரது உறவினர்களான விவேக், ராமச்சந்திரன், மருத்துவர்கள் வெங்கடேஷ், சிவகுமார் ஆகியோர் அவரை கவனித்துக் கொள்கின்றனர்.
இதனிடையே சசிகலாவுடன் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் போது மேற்கொள்ள வேண்டிய வரவேற்பு ஏற்பாடுகள், நடத்த வேண்டிய பூஜைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
அதிமுகவை மீட்டெடுப்பார்
இதனிடையே சொகுசு விடுதிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியடிடிவி தினகரன், ‘‘அதிமுக பொதுக் குழுவில் சசிகலா பொதுச் செயலா ளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால் அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது? அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எல்லா உரிமையும் உள்ளது. பொதுக் குழுவை கூட்டவும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்கும் பணி தொடரும். சென்னை திரும்பியவுடன் ஜனநாயக முறைப்படி அதற்கான போராட்டத்தை தொடங்குவார். அதிமுகவை மீட்டெடுக்கதான் அமமுக தொடங்கப்பட்டது''என்றார்.