

திருப்பதியில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் 2-வது மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இணைப்பு பாதை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை மலைப்பாதை மூடப்பட்டது. இதனிடையே மலைப்பாதையில் மராமத்து பணிகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டது.
இந்நிலையில் ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சர் காமிநேனி நிவாஸ் 2-வது மலைப்பாதையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மலை சரிவுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலச்சரிவு ஏற்பட்டாலும் ஏழுமலையான் அருளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. திருப்பதி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை மையம் அமைக்கப்படும். மழை காரணமாக தொற்று நோய் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
பின்னர் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்களும், தீர்த்த பிரசாதங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.