

தரையில் இருக்கும் எதிரிகளின் இலக்கை கண்டறிந்து துல்லியமாக தாக்கும் திறன் படைத்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் பிரம் மோஸ் ஏவுகணைகள், இந்திய ராணுவத் தில் சேர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கடந்த மே, 8 மற்றும் 9ம் தேதிகளில், வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தரையில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை 50-வது முறையாக நேற்று ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் உள்ள ஏவுகணை சோதன மையத்தில் நடத்தப்பட்டது. நகரும் தானியங்கி லாஞ்சர் மூலம் செலுத் தப்பட்ட இந்த ஏவுகணை எதிர்பார்த்த படியே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. இதையடுத்து, ஏவுகணை சோதனயில் ஈடுபட்ட, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
300 கி.மீ., பாயும்
தற்போது சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றது. ஒலியைவிட 2.8 மடங்கு வேகமாக செல்லும் வல்லமை கொண்டது.கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மூலம், இந்த ஏவுகணையை எளிதாக எடுத்துச் சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்க முடியும். தரைப் பகுதியில், ரகசியமாக மறைந்திருக்கும் எதிரிகளின் இலக்கையும், பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் வல்லமை கொண்டது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை, ரஷ்யாவின் ராணுவ ஆராய்ச்சி கழகம் மற்றும் இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.