

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு கனமழை பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட கடுங் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பெங்களூருவில் ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தில் சராசரியாக 54.1 மில்லி மீட்டர் மழை பொழிவும்,லேசான பனிப்பொழிவும் இருக்கும். அதிகபட்சமாக கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் மாதம் 252.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித் துள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் பெங்களூருவில் 256.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை நீடிப்பதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மழைபொழிவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கனமழையால் வெப்ப நிலை 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்திருப்பதால் கடுங்குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.