Published : 31 Jan 2021 09:45 PM
Last Updated : 31 Jan 2021 09:45 PM

திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி: விதிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி

திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போது திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் முழு அளவில் செயல்படலாம். கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்துதல் மற்றும் கொவிட் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தியேட்டருக்குள் இருக்கும் அரங்குகளில் உணவு பொருட்களை மக்கள் வாங்கி கொள்ளலாம். கொவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன’’ என்றார்.

திரையரங்குகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 27ம் தேதி பிறப்பித்த உத்தரவையடுத்து இந்த நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொற்றுக் கட்டுப்பாட்டு மண்டலங்களில், திரைப்படங்கள் திரையிடுவதற்கு அனுமதி இல்லை. அங்கு களஆய்வு மதிப்பீட்டின் படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி முடிவு செய்துக் கொள்ளலாம் என நிலையான செயல்பாட்டு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

திரையரங்கு வளாகத்துக்குள் கொவிட் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என நிலையான செயல்பாட்டு விதிமுறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது, திரையரங்குக்கு வெளியே, பொது இடங்கள், காத்திருப்பு பகுதிகளில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பொதுவான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்படுகிறது. ஆரோக்ய சேது செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x