இருதரப்பு உறவை உயர்த்துவது உட்பட இந்தியா, சிங்கப்பூர் இடையே 10 ஒப்பந்தங்கள்
இந்தியாவும் சிங்கப்பூரும் தங்களுக்கு இடையிலான உறவை ராஜிய ரீதியிலான நிலைக்கு உயர்த்திக் கொள்வது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்களில் நேற்று கையெழுத்திட்டன.
மலேசிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். இந்தப் பயணத்தின் 2-ம் நாளான நேற்று அந்நாட்டு அதிபர் டோனி டான் கெங்கை மோடி சந்தித்துப் பேசினார். முன்னதாக, இஸ்தானாவில் (அதிபர் மாளிகை) மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங்கை மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, இவர்களது முன்னிலையில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து இரு நாடுகள் சார்பிலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவும், சிங்கப்பூரும் தங்களது இருதரப்பு உறவை ராஜிய ரீதியிலான நிலைக்கு உயர்த்திக் கொள்வது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார, கலாச்சாரம், மக்கள் தொடர்பு ஆகிவற்றுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்கெனவே உள்ள உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கும். மேலும் பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பை வழங்குவதற்கான கட்டமைப்பாகவும் இது அமையும்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இருநாட்டு பாதுகாப்பு அமைச்சகங்கள் நிலையிலான பேச்சுவார்த்தை, இருதரப்பு ராணுவ கூட்டுப் பயிற்சி, ராணுவ தளவாட உற்பத்தித் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த வகை செய்யும்.
கணினி தகவல் பாதுகாப்பை (சைபர் செக்யூரிட்டி) மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இது கணினியில் ஊடுருவி தகவல்களை முடக்குவது போன்ற சமூக விரோதிகளின் செயலை தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ள உதவும்.
இதுபோல, விமானப்போக்குவரத்து, நகர்ப்புற திட்டமிடல், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, கலாச்சாரங்களை பகிர்ந்து கொள்வது, கடல் பாதுகாப்பு உட்பட மொத்தம் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் சிங்கப்பூர் அதிபர் அலுவலகம் (இஸ்தானா) ஆகியவற்றின் நினைவு அஞ்சல் தலைகளை இரு நாட்டு பிரதமர்களும் வெளியிட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
