

உத்தரப்பிரதேசம், கோரக்பூரைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் உள்ளிட்ட 80 பேர், மாவட்ட காவல்துறையின் கண்காணிப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் மருத்துவர் கஃபீல்கான் பேசியதாகக் குற்றம் சாட்டி, அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு கைது செய்தது.
இதனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்ட கஃபீல்கான் அலிகர் அழைத்து வரப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீது தொடக்கத்தில் ஐபிசி 153ஏ பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்பின் ஐபிசி 153பி மற்றும் 505 (2) ஆகியவை சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அலிகர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், 13-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல்கானை உ.பி. அரசு கைது செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் கஃபீல்கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவை கஃபீல்கானின் தாய் நுஷ்ரத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மருத்துவர் கஃபீல் கானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது எனக் கூறி ரத்து செய்து அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது எனக் கூறி, தீர்ப்பளித்தது.
இந்நிலையில் கோரக்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 81 பேருக்கு எதிராக ஹிஸ்டரி ஷீட் அதாவது, குற்றப்பின்னணி உள்ளவர்களை கண்காணிக்கும்பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
கோரக்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜோகிந்தர் குமார் உத்தரவின் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பதிவேட்டில் மருத்துவர் கஃபீல்கான் உள்பட 81 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றப்பதிவேடு குறித்து கஃபீல் கான் சகோதரரர் அதீல் கான் கூறுகையில் “ இந்த குற்றப்பதிவேடு கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊகடத்துக்கு சனிக்கிழமை(நேற்று) வெளியாகியிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மருத்துவர் கஃபீல் கான் காணொலி மூலம் அளித்த பேட்டியில் “ உத்தரப்பிரதேச அரசுக்கு எனக்கு எதிராக ஹிஸ்டரி ஷீட் தயாரித்துள்ளது. என்னை வாழ்நாள் முழுவதும் கண்காணிக்கட்டும்.
நல்லதுதான், என்னுடன் இரு காவலர்களை பாதுகாப்புக்காக அனுப்பி வைத்து 24 மணிநேரம் கண்காணித்தால், குறைந்தபட்சம் என் மீது பதிவுசெய்யப்படும் பொய்யான வழக்குகள் தவிர்க்கப்படும். உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்கள் கண்காணிக்கப்படுவதில்லை, ஆனால், அப்பாவிகளுக்கு எதிராக ஹிஸ்டரி ஷீட் தயாரிக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்தார்.