மம்தாவுக்கு மேலும் பின்னடைவு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜீவ் பானர்ஜி அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் 

டெல்லியில் அமி்த ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ராஜீவ் பானர்ஜி : படம்|ஏஎன்ஐ
டெல்லியில் அமி்த ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ராஜீவ் பானர்ஜி : படம்|ஏஎன்ஐ
Updated on
2 min read

முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியில் அமைச்சராக இருந்து கடந்த சில நாட்களுகு முன் பதவியை ராஜினாமா செய்த ராஜீவ் பானர்ஜி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

ராஜீவ் பானர்ஜி தவிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள், பலரும் பாஜகவில் இணைந்தனர்.

தோம்ஜூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜீவ் பானர்ஜி, வெள்ளிக்கிழமை தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகர் பீமன் பானர்ஜியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பாஜகவில் சேர ராஜீவ் பானர்ஜி முடிவெடுத்துள்ளாதாக தகவல்கள் வந்தன, அது குறித்து, ராஜீவ் பானர்ஜியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் பதில் அளிக்கையில், “ எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து விலகும் 3-வது அமைச்சர் ராஜீவ் பானர்ஜி ஆவார். இதற்கு முன் சுவேந்து அதிகாரி, லட்சுமி ரத்தன் சுக்லா ஆகியோர் விலகினர். இதில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்துவிட்டார்.

ராஜீவ் பானர்ஜி தவிர்த்து, எம்எல்ஏ பிரபிர் கோஷல், திரிணமூல் காங்கிரஸிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பைஷாலி டால்மியா, ஹவுரா முன்னாள் மேயர் ரதின் சக்ரவர்த்தி ஆகியோரும் நேற்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

மேலும், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி சதோபத்யாயே, நடிகர் ருத்ரானில் கோஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா, மூத்த தலைவர் முகுல் ராய் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பாஜகவில் இணைந்த ராஜீவ் பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில் “ திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் விலகியதும் அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்து டெல்லிக்கு வருமாறு கூறினார். இந்தத் தகவலை மக்களுக்கு சேவையாற்ற விருப்பமாக இருக்கும் 5 முக்கிய நபர்களிடம் கூறி, அவர்களையும் அழைத்துவருமாறு தெரிவித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதி கிடைத்ததால், மக்களின் நலனுக்காக நான் உழைக்க வாய்புக் கிடைத்ததால், நான் பாஜகவில் சேர்ந்தேன். எனக்கு என்ன மாதிரியான பணி என்பதை பாஜக முடிவு செய்யும். எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் ஏற்கத் தயராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் மிட்னாபூருக்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா வந்திருந்தார். அமித் ஷா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 34 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் ஒரு எம்.பி., 8 எம்எல்ஏக்கள் அடங்கும்.

இதுவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி., இடதுசாரி கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in