கன்னட தேசிய கவிஞர் குவெம்பு நினைவகத்தில் பத்ம விருதுகள் திருடியதாக 3 பேர் கைது

கன்னட தேசிய கவிஞர் குவெம்பு நினைவகத்தில் பத்ம விருதுகள் திருடியதாக 3 பேர் கைது
Updated on
1 min read

கன்னட தேசிய கவிஞர் குவெம்புவின் நினைவக‌த்தில் பராமரிக்கப்பட்டு வந்த பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை திருடிய சுற்றுலா வழிகாட்டி உட்பட 3 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர்.

க‌ர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள குப்பள்ளி கிராமத்தில் குவெம்பு நினைவகம் உள்ளது. இங்கிருந்த அவரது விருதுகளை கடந்த 22-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மேலும் போலீஸில் சிக்காமல் இருப்பதற்காக நினைவகத்தில் இருந்த 6 கண்காணிப்பு கேமராக்கள், 2 தொலைக்காட்சி திரைகள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் திருடர்களை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட் டது.

இந்நிலையில் உடைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு அனுப்பி, பதிவான சில நொடி காட்சிகளை மீட்டபோது, ஒரு குற்றவாளியின் படம் சிக்கியது. இதை வைத்து தாவணகெரேவை சேர்ந்த கயக்காடு ரேவண்ணா (48) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குவெம்பு நினைவகத்தில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்த ஆஞ்சனப்பா என்பவர் தான் இந்த திருட்டுக்கு திட்டம் வகுத்தார் என்பது தெரியவந்தது.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த குவெம்புவின் பத்ம விருதுகள், தங்கப்பதக்கங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in