டெல்லி குடியுரசு தின வன்முறை: சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read


டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து சிறப்பு விசாரணைக் குழுவை ஏற்படுத்தி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் , விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 300-க்கும்மேற்பட்ட போலீஸாரும், விவசாயிகளும் காயமடைந்தனர்.

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் விஷால் தாக்கரே, அபய் சிங் யாதவ் ஆகியோர் தங்கள் வழக்கறிஞர் பிரதீப் குமார் மூலம், குடியரசு தின கலவரம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைக்கு உண்மையான விவசாயிகளைக் குற்றம்சுமத்த முடியாது. டிராக்டர் பேரணியில் புகுந்த குண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டுள்ளனர். டிராக்டர் பேரணியைப் பயன்படுத்திக்கொண்டு டெல்லி என்சிஆர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

டெல்லி போலீஸார் மீது மனிதநேயற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்தச் செயல் நாடுமுழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக சுயசார்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பொறுப்பானவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். விவசாயிகள் பேரணியல் ஊடுருவிய குண்டர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும், டிராக்டர் பேரணி நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசும், டெல்லி போலீஸாரும் அளித்த அனுமதியை தவறாக சிலர் பயன்படுத்தி விவசாயிகளை கையில் வைத்து செயல்பட்டுள்ளார்கள்.

நீதித்துறையின் நலனுக்காக, இந்ததாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்காணிப்புக் கேமிரா மூலம், மொபைல் வீடியோ மூலம் கண்டறிந்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூலம் விசாரிக்கவோ அல்லது சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவோ உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in