

பவுத்த மதத்தை தோற்றுவித்த கவுதம புத்தரின் 100 அடி சிலை கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. புத்தகயாவில் உள்ள ஒரு கோயிலில் இது அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது.
கொல்கத்தாவின் பாராநகர் பகுதியில் கோஷ்பாரா என்றஇடத்தில் உள்ள ஒரு மைதானத்தில் மின்ட்டு பால் என்ற கலைஞர் இதனை உருவாக்கி வருகிறார். புத்தர் கையைத் தலைக்குக்கொடுத்தவாறு படுத்திருக்கும்தோரணையில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்தச் சிலை, பைபர்கிளாசில் தயாரிக்கப்படுகிறது.
‘புத்தா இன்டெர்நேஷனல் வெல்பேர் மிஷன்’ என்ற அமைப்பு இதற்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. பிஹார் மாநிலம் புத்தகயாவில் உள்ள ஒரு கோயிலில் அடுத்த ஆண்டு புத்த பூர்ணிமா நாளில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட உள்ளது.
இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் அறிந்தவரை இதுவே நம் நாட்டின் மிகப்பெரிய புத்தர் சிலை” என்றார்.
சிற்பக் கலைஞர் மின்ட்டு பால் கூறும்போது, “சிலைக்கான பணி சீராக நடந்து வருகிறது. ஒவ்வொரு பாகமாக இதனை செய்து வருகிறோம். இதனை செய்து முடிக்க சில மாதங்கள் ஆகும். பிறகு இவை கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பல்வேறு பாகங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்” என்றார்.
மின்ட்டு பால் இதற்கு முன்பு கடந்த 2015-ல் கொல்கத்தாவின் தேசப்ரியா பூங்கா பகுதியில் 80 அடி உயர துர்கா சிலையை அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய துர்கா சிலையாக இது கருதப்படுகிறது.