

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் கொண்டவலசா லட்சுமண ராவ் (69) மோசமான உடல்நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் கொண்டவலசா லட்சுமண ராவ் 10.8.1946-ல் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொண்டவலசா பகுதியில் பிறந்தார். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றிய இவர், தனது சிறுவயதில் பல நாடகங்களில் நடித்துள்ளார். நாடக துறையில் தனி முத்திரை பதித்த இவருக்கு 3 நந்தி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனால் இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டானது.
இதனை தொடர்ந்து ‘அவுனு வாள்ளித்தரு இஷ்ட பட்டாரு’ எனும் திரைப்படத்தில் அறிமுகமாகி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றால் இவரின் உடல் நலம் பாதிப்படைந்தது. நேற்று முன் தினம் இரவு மேலும் உடல் நிலை பாதிக்கப் பட்டதால், இவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச் சைக்காக கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு லட்சுமண ராவ் மரண மடைந்தார்.
அவரின் மறைவை அறிந்த தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.