

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த புல்வாமா பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் மூன்று பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த என்கவுன்ட்டர் நடந்ததாக காஷ்மீர் காவல்துறைத் தலைவர் விஜய குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
''புல்வாமாவை அடுத்த அவந்திபோரா பகுதியில் இந்த என்கவுன்ட்டர் நடந்தது. அவந்திபோராவில் உள்ள மண்டூரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை மாலை விரைந்து சென்ற காவல்துறையும், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் (சிஆர்பிஎஃப்) மண்டூரா கிராமத்தின் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி வளைத்தன.
அப்போது தீவிரவாதிககள் சரணடையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், அவர்கள் சரணடைய மறுத்துவிட்டனர். மேலும், காவல்துறையினர் மீது கையெறி குண்டுகளை வீசினர். இதனைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.
துப்பாக்கிச் சண்டையின்போது ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் இணைந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த செல்போன்களின் அழைப்புகளைப் பகுப்பாய்வு செய்தபோது பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஐபி முகவரிகளைக் காண்பித்தது.
செல்போன்களின் மெட்டாடேட்டா பகுப்பாய்வு ஐபி முகவரிகள் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாதியின் செல்போனில் பாகிஸ்தானின் மிக முக்கியமான பயங்கரவாதக் குழுத் தளபதிகளுடன் அவர்கள் அனைவரும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரின் தொலைபேசி அழைப்புகளின் உள்ளடக்கம் உட்பட டாடா தரவுகள் அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்''.
இவ்வாறு காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய குமார் தெரிவித்தார்.
ஹிஸ்புல்-முஜாஹிதீன் என்பது ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் ஒரு பிரிவினைவாத தீவிரவாதக் குழு ஆகும். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பு பாகிஸ்தானில் சட்டரீதியான அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.