

டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், மற்றும் பத்திரிகையாளர்கள் மிரினல் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் அகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் ஆகியோர் மீது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத் துரோகம், குற்றச் சதி, மக்களிடம் மோதலைத் தூண்டும் வகையில் விரோதத்தை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுதவிர, மத்திய பிரதேசத்தில் போபால், ஹோசங்காபாத், முல்டாய், பீட்டல் ஆகிய இடங்களிலும் சசிதரூர் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு ‘எடிட்டர்ஸ் கில்ட்’ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தவறான செய்தியை சமூக ஊடகத்தில் வெளியிட்டதற்காக ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது இந்தியா டுடே குழுமம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.