

குஜராத் காவல் துறையில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் அறிவித்துள்ளார்.
காந்திநகரில் உள்ள காவல் துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த 134 போலீ்ஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் நிருபர்களிடம் கூறியதாவது:
சமுதாயத்தில் பெண்களை முன்னேறச் செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காக எனது அரசு சார்பில் காவல் துறை பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதியும் சமூக நல்லிணக்கமும் மிகவும் அவசியம். கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் சிறிய கலவரம்கூட ஏற்படவில்லை. அதன் விளைவாகத்தான் மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளார். அதனால் நாட்டின் மிகவும் பாதுகாப்பான மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து வரும் காவல் துறையினருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் கூறினார்.