

பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பத்திரிகையாளர்கள் அலைமோதிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் பாஜக தலைமையகத்தில் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி கீழே அணிவகுத்திருந்த பத்திரிகையாளர்களிடம் கைகுலுக்கி பேசினார்.
அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் மோடியுடன் செல்ஃபீ எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இதனால், பலரும் பிரதமர் மோடியுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ள அலைமோதினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டும் தீபாவளி மிலன் நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர்கள் மோடியுடன் புகைப்படம் எடுக்க போட்டிபோட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய திருவிழாக்கள் சமுதாயத்துக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் உள்ளன. தீபாவளி பண்டிகை ஒளியைக் கொண்டாடும் விழா. இதில் பாகுபாடு இல்லை. சமுதாயத்தின் சமநிலையை இந்தப் பண்டிகை பறைசாற்றுகிறது.
தீபாவளியைப் போல் இன்னும் பிற இந்திய திருவிழாக்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியை அலசி ஆராய்ந்தால் நிறைய கதைகள் கிடைக்கும். கும்ப மேளாவுக்காக கங்கை கரைகளில் குவியும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது ஒரு ஐரோப்பிய நாடே குழுமியிருப்பதுபோல் இருக்கும்" என்றார்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, "கடந்த இரண்டு நாட்கள் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அரசியல் சாசன அமர்வு குறித்த சிறப்பு அமர்வு நடைபெற்றது.
அரசியல் சாசனைத்தை அனைத்து நெறிகளைக் காட்டிலும் அரசு உயர்வாகப் பார்க்கிறது. அடுத்த ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்படும்" என்றார்.