

'ராணுவத் தளவாடங்களை இந்தியா பெருமளவு இறக்குமதியே செய்து வருகிறது. எனவே உள்நாட்டில் தயாரிக்கும் தொழில்நுட்பம் வளர்த்தெடுக்கப்பட்டால் ராணுவ பட்ஜெட்டில் 50% குறைக்கப்பட்டு, அது கல்வி உள்ளிட்ட மற்ற வளர்ச்சித் துறைகளுக்கு பயன்படுத்த முடியும்' என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மோடி கூறும்போது, “இன்றைய தினத்தில் நம் நாடு ராணுவ தளவாடங்களை பெருமளவு இறக்குமதி செய்து வருகிறது. எனவே உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தொழில் நுட்ப உதவியுடன் மலிவாகத் தயாரித்து, அதன்மூலம் பிற நாட்டு இறக்குமதியாளர்கள் இந்த உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்ளும் மனித வள ஆதாரங்களை வளர்த்தெடுக்கும் ஆய்வுகளை நாம் உருவாக்க முடியாதா? இதனைச் செய்தால் இந்தியாவை உலகச் சந்தையாக மாற்ற முடியும்.
நம் நாட்டு நிறுவனங்கள் இதனை முடிவு செய்தால், அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ தளவாட இறக்குமதியை 50% குறைத்து அந்தத் தொகை கல்வித்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இது எவ்வளவு பெரிய பயனைத் தரும். நாம் சுயநிறைவும் எய்த முடியும்.
ஒட்டுமொத்த சமூக நடவடிக்கைகளுமே தொழில்நுட்பத்தினால் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நம்மால் செலவினங்களை தாங்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கி நாம் செல்வது முக்கியமானதாகும். இன்றைய தினம் தொழில்நுட்பம் ஆற்றும் முக்கியப் பங்கு இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் இருந்ததில்லை.
அயல்நாட்டு தொழில்நுட்பங்களை நாம் நம்பியிருக்கும் வரை பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கும். அறிவியல் உலகளாவியது ஆனால் தொழில்நுட்பம் உள்நாடு சார்ந்தது.
ஆரம்பக் கல்வி ஒருவரின் நடத்தையையும் குணத்தையும் வளர்க்க உதவுகிறது. அதே போல் உயர் கல்வியை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவது அவசியம். உயர்கல்விதான் ஒருவர் உச்சத்தை எட்ட முடியும். ஆரம்பக்கல்வி அடித்தளத்தை வலுவாக அமைத்தால், உயர் கல்வி தேசக்கட்டுமானத்துக்கு உதவும்.
நீடித்த - பாதுகாப்பான தொழில்நுட்பத்தை நாம் வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
லட்சம் லட்சமான சவால்கள் இருக்கின்றன. ஆனால், கோடிகோடியான மூளைகளும் உள்ளன. ஆனால் இந்த மூளைகளை புதிய கண்டுபிடிப்புகள் நோக்கி நாம் இணைக்கவில்லை எனில், நம்மால் இந்த மூளைகளுக்குத் தேவையான ஊட்டத்தை நம்மால் அளிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
நம்மிடையே கோடிக்கணக்கான மூளைகள் இருக்கின்றன என்பதற்கு நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம், ஆனால் இதனை நாம் சரிவர இணைக்க முடியவில்லை எனில் இந்த மூளைகள் பயனற்று போய்விடும்.
புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வை ஏற்கெனவே சில நாடுகள் விற்பனை வாய்ப்பாக மாற்றியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்கால சந்ததியினர் புதியதை புகுத்த முயற்சி செய்வது அவசியமாகும்” இவ்வாறு பேசினார் மோடி.