

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகிய ராஜீவ் பானர்ஜி, இன்று தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் விரைவில் பாஜகவில் இணைவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோம்ஜூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜீவ் பானர்ஜி, இன்று காலை சபாநாயகர் பிமான் பானர்ஜியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
கடந்த 20-ம் தேதி சாந்திபூர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராஜீவ் பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், “நான் என்னுடைய எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டேன். அதற்குரிய கடிதத்தையும் பேரவைத் தலைவரிடம் அளித்துவிட்டேன். எனக்கு மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், மக்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவீர்களா என நிருபர்கள் கேட்டபோது, அதற்கு பானர்ஜி பதில் அளிக்கையில், “இப்போது ஏதும் முடிவு எடுக்கவில்லை. என்னுடைய முடிவை தெளிவாக நாளை அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பாஜகவில் இணையப் போகிறார்களா என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு பானர்ஜி, “நீங்கள் மக்கள் பணியாற்ற வேண்டுமானால் நிச்சயம் அரசியல் கட்சியில் இணைய வேண்டும், அரசியல் கட்சியோடு இணைந்த அரசியல் தலைவரைத்தான் மக்கள் விரும்புவார்கள். இதுவரை பாஜக தலைவர்களுடன் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்துக்கு 2 நாட்கள் பயணமாக ஜன.31-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா வர உள்ளார். ஹவுராவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் அமித் ஷா முன்னிலையில் ராஜீவ் பானர்ஜி பாஜகவில் இணைவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து விலகும் 3-வது அமைச்சர் ராஜீவ் பானர்ஜி ஆவார். இதற்கு முன் சுவேந்து அதிகாரி, லட்சுமி ரத்தன் சுக்லா ஆகியோர் விலகினர். இதில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்துவிட்டார்.
கடந்த மாதம் மிட்னாபூருக்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா வந்திருந்தார். அமித் ஷா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 34 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் ஒரு எம்.பி., 8 எம்எல்ஏக்கள் அடங்கும்.
இதுவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி., இடதுசாரி கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.