டெல்லி சிங்கு எல்லையில் கண்ணீர்புகை, தடியடி, கல்வீச்சு: விவசாயிகளை காலிசெய்யக் கோரும் பொதுமக்கள் போராட்டம் கலவரமாக வெடித்தது

டெல்லி சிங்கு எல்லையில் கண்ணீர்புகை, தடியடி, கல்வீச்சு: விவசாயிகளை காலிசெய்யக் கோரும் பொதுமக்கள் போராட்டம் கலவரமாக வெடித்தது

Published on

டெல்லி அருகே சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டக் களத்தை காலிசெய்யக் கோரி அப்பகுதியின் பொதுமக்கள் இன்று ஆர்பாட்டம் நடத்தினர். இது, கலவரமாக வெடித்து கல்வீச்சு, தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் என பதட்டம் நிலவியது.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக தொடர்ந்த இப்போராட்டத்தில் குடியரசுதினத்தன்று டிராக்டர் ஊர்வலத்தால் கலவரம் நிகழ்ந்தது.

இதனால், கடந்த இரண்டு தினங்களாக இப்போராட்டத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தவகையில், இன்று காலை டெல்லி-ஹரியானா எல்லையின் சிங்கு பகுதியில் இன்று காலை முதல் வழக்கத்திற்கு மாறாக போலிஸார் குவிந்தனர்.

பிறகு காலை 11.00 மணி முதல் கூடிய அப்பகுதிவாசிகள் சுமார் 200 பேர், விவசாயிகளுக்கு எதிராகக் கோஷமிட்டு ஆர்பாட்டம் துவங்கினர். இவர்களில் வெளிப்பகுதியை சேர்ந்தவர்களும் தேசியக் கொடிகளுடன் இருந்தனர்.

அனைவரும் இணைந்து, சிங்கு எல்லையில் இருந்து விவசாயிகளை காலி செய்யும்படி கோஷமிட்டனர். செய்தியாளர்களிடம் பேசி இவர்களில் சிலர், கடந்த 40 நாட்களாக இப்போராட்டத்தால் அன்றாட வாழ்க்கை பாதித்திருப்பதாகப் புகார் கூறினர்.

வீட்டை விட்டும் வெளியில் வர முடியாமல் கைதிகளை போல் முடங்கி இருக்க வேண்டியதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்பாட்டத்தில் ‘பாரத் மாதா கீ ஜெய்’, ’ஜெய் ஸ்ரீராம்’ என்றும் சிலர் கோஷம் எழுப்பப்பட்டன.

கோஷமிட்டவர்களை சுற்றி டெல்லி காவல்துறையின் படைகளும் நின்றிருந்தன தவிர, அதில் உயர் அதிகாரிகள் எவரும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

சுமார் 12.00 மணிக்கு போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக விவசாயிகளின் கூடாரங்களை திடீர் எனக் கிழித்தெறியத் துவங்கினர். இதை விவசாயிகள் தடுக்க முற்பட, இருதரப்பினருக்கு இடையே மோதலாக வெடித்தது.

இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீடி எறிந்து கொண்டனர். இதையடுத்து சிங்கு எல்லை பதட்ட நிலையை எட்டியது. பிறகு டெல்லி போலீஸார் அங்கு கூடியிருந்த கும்பல் மீது தடியடி நடத்தினர்.

இதில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனவே, டெல்லி போலீஸார் கண்ணிர் புகை குண்டுகளையும் வீசினர். இச்சூழலில் மதியம் சுமார் 2.00 மணிக்கு கலவரம் ஒரளவிற்கு அடங்கியது.

இரண்டு தரப்பினரையும் பிரிந்து டெல்லி போலீஸார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருதரப்பினருக்கும் இடையே எல்லை கோடு வகுத்து அதை எவரும் தாண்டாதபடி பாதுகாக்கத் துவங்கி உள்ளனர்.

எனினும், விவசாயிகள் போராட்டக் களத்திலிருந்து விலகாமல் அதை தொடர்கின்றனர். இப்பகுதியில் கிடைத்து வந்த மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் வசதி நேற்று முன் தினம் இரவு முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று காலை முதல்முறையாக சிங்கு எல்லையில் விவசாயிகளை எதிர்த்து ஆர்பாட்டம் நடைபெற்றது. சுமார் 100 கொண்ட அவர்கள் தாம் இந்துசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் அமைதியாக நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, அதேவகையில் இன்று துவங்கிய பொதுமக்கள் ஆர்பாட்டம் கலவரமாக மாறியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in