டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு

டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் | படம்: ஏஎன்ஐ.
டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் | படம்: ஏஎன்ஐ.
Updated on
1 min read

டெல்லி- உ.பி. எல்லையில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு ராஷ்டிரிய லோக் தளம் தமது ஆதரவை இன்று தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அனைத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன.

குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து டெல்லி திக்ரி, சிங்கு எல்லைகள், உத்தரப் பிரதேசம் மீரட் எக்ஸ்பிரஸ் சாலை, காஜியாபாத் எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் ஏராளமான போலீஸார், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி எல்லையில் பல்வேறு சாலைகளும் மூடப்பட்டு மாற்றுப் பாதையில் செல்ல வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி-காஜியாபாத் எல்லையில் பாரதிய கிசான் யூனியன் நடத்திவரும் போராட்டத்திற்கு இன்று ராஷ்டிரிய லோக் தளக் கட்சி பாரதிய கிசான் யூனியனுக்கு (பி.கே.யூ) ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராஷ்டிரிய லோக் தளக் கட்சியின் தலைவர் அஜித் சிங்கின் மகனும் கட்சியின் துணைத் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:

''புகழ்பெற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் மகேந்திர சிங் டிக்கைட் மகன்களான டிக்கைட் சகோதரர்கள் பாரதிய கிசான் யூனியனை வழிநடத்துகின்றனர்.

இரண்டு மாதங்களாக டெல்லி காசிப்பூர் எல்லையில் உள்ள உ.பி. கேட் பகுதியில் போராடிவரும் பாரதிய கிசான் யூனியன் சங்க விவசாயிகள் போராட்டத்திற்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு தெரிவிக்கிறது. விவசாயிகள் சங்கத் தலைவர்களுடனும் நான் இதுகுறித்துப் பேசினேன்.

டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டம் விவசாயிகளுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. எனினும் இதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம்.

அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். இதில் நாம் கருத்து வேற்றுமைகள் இன்றி அவர்களுடன் ஒன்றுபட்டிருக்க வேண்டும். இது சவுத்ரி சாஹாபின் (அஜித் சிங்கின்) செய்தி''.

இவ்வாறு ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய லோக் தளக் கட்சியின் தலைவர் அஜித் சிங், முன்னாள் பிரதமரும் விவசாயிகள் தலைவருமான சரண் சிங் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in