Last Updated : 28 Jan, 2021 07:14 PM

8  

Published : 28 Jan 2021 07:14 PM
Last Updated : 28 Jan 2021 07:14 PM

சிறுமியின் கைகளைப் பற்றி பேண்ட் ஜிப்பைத் திறக்கச் செய்வது போக்சோ- பாலியல் துன்புறுத்தலில் வராது: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்.

நாக்பூர்

சிறுமியின் கைகளைப் பற்றி ஒருவரின் பேண்ட் ஜிப்பைத் திறக்கச் செய்வது போக்சோ சட்டத்தின் கீழ், பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் வராது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தீர்ப்பளித்து ஒருவரை விடுவித்துள்ளது.

நாக்பூர் அமர்வின் ஒரு நீதிபதி அமர்வு, புஷ்பா கனேடிவாலா கடந்த 15-ம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நீதிபதி கடந்த 19-ம் தேதி வழங்கிய தீர்ப்பு சர்ச்சைக்குள்ளானது. மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

அதாவது, சிறுமிகளை மேல் ஆடைகளோடு தொடுவது பாலியல் துன்புறுத்தல் இல்லை, போக்சோ சட்டத்தில் வராது எனக் கூறி நீதிபதி புஷ்பா தீர்ப்பளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரையும் தண்டனையைக் குறைத்து நீதிபதி புஷ்பா விடுவித்தது சர்ச்சையானது. போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல், சீண்டல் என்பது உடலோடு உடல் சேர்ந்தால் மட்டும் குற்றமாகும் என போக்சோ சட்டத்துக்குப் புது விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் மீண்டும் அதேபோன்ற தீர்ப்பை நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 வயதுச் சிறுமியை 50 வயதுடைய லிப்னஸ் குஜூர் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்த 50 வயது நபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, அந்த நபரை விடுவித்துத் தீர்ப்பளித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி 5 வயதுச் சிறுமியின் தாய் வேலைக்குச் சென்றவுடன், லிப்னஸ் குஜூர் அந்த வீட்டுக்குள் சென்றுள்ளார். மாலை அந்தச் சிறுமியின் தாய் வீட்டுக்குத் திரும்பும்போது குஜூரின் பேண்ட் ஜிப்புக்குள் அந்தச் சிறுமியின் கை இருப்பதை அந்தக் குழந்தையின் தாய் பார்த்துள்ளார்.

இதை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது குழந்தையிடம் தாய் விசாரித்தபோது, தான் இல்லாத நேரத்தில் அந்தக் குழந்தையைத் தகாத முறையில் நடந்துகொள்ளச் செய்ய அந்த நபர் வற்புறுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையும் அந்தக் குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

இதையடுத்து, குஜூர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த ஐபிசி பிரிவு 354-ஏ(1) (ஐ), பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), போக்சோ சட்டப் பிரிவு 8 (பாலியல் தாக்குதல்), பிரிவு 10 (திட்டமிட்டுப் பாலியல் துன்புறுத்தல்), பிரிவு 12 ஆகிய பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குஜூருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜூர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நாக்பூர் அமர்வில் நீதிபதி புஷ்பா கனேடிவாலா முன் விசாரிக்கப்பட்டு கடந்த 15-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், “குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குள் அவரைப் பாலியல் துன்புறுத்தும் நோக்கத்துடன் சென்றார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அவர் மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. போக்சோ சட்டத்தின்படி, உடல்ரீதியான தொடர்பு இருத்தலே பாலியல் துன்புறுத்தலாகும்.

குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப்புக்குள் பாதிக்கப்பட்ட சிறுமியின் கைகளைப் பிடித்துத் திறக்கச் செய்வதும், அதை அந்தச் சிறுமியின் தாய் பார்த்ததாக சாட்சி அளித்திருந்தாலும், போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல், சீண்டலில் வராது. பாலியல் துன்புறுத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர் ஈடுபட்டார் என்பதற்கு இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஆதலால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. 354ஏ பிரிவின் கீழ் மட்டுமே சிறு குற்றமாகக் கருதப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்கலாம்” எனத் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x