''அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம்''- காங். எம்.பி. வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா, செல்லத்தக்கதா எனக் கேள்வி எழுப்பி கேரள காங்கிரஸ் எம்.பி., டி.என்.பிரதாபன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேளாண் சட்டங்களால் எழுந்த சிக்கலைத் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும்வரை சட்டங்களை அமல்படுத்தத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்.பி. பிரதாபன் மனுவையும் ஏற்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சூர் மக்களவை எம்.பி. டிஎன் பிரதாபன், தனது வழக்கறிஞர் ஜேம்ஸ் பி.தாமஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார்.

அதில், “வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது ரத்து செய்யப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14 சமத்துவ உரிமை, பிரிவு 15 பாகுபாடு காட்டுவதற்கு எதிரான உரிமை, பிரிவு 21 சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது.

இந்திய வேளாண்மை என்பது சிறு சிறு குழுக்களாக வகைப்படுத்தப்படுகிறது. காலநிலை, உறுதியில்லாத உற்பத்தி, கணிக்கமுடியாத சந்தை என நமது கட்டுப்பாட்டை மீறி பலவீனங்கள் வேளாண்மையில் இருக்கின்றன.

பருவமழையைச் சார்ந்து இருக்கும் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை, ஏபிஎம்சி சந்தைகளை வலுப்படுத்தாமல் வருவாயைப் பெருக்குவதன் மூலம் தீர்த்துவிட முடியாது. இதைச் சரிசெய்ய அதிகமான முதலீடு, குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்த வேண்டும். 2015-16ஆம் ஆண்டு வேளாண் புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து மத்திய அரசு பிரதமர் கிசான் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

ஆனால், தற்போது நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் 14.5 கோடி பேர் உள்ளனர். இந்த 14.5 கோடி பேரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் அமைந்துள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in