

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்து, சீக்கிய மதக் கொடியை ஏற்றியவர்கள் மீது தேசத்துரோக வழக்கை டெல்லிபோலீஸார் பதிவு செய்துள்ளனர்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் , விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 100-க்கும்மேற்பட்ட போலீஸாரும், விவசாயிகளும் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் 25 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, முதல்கட்டமாக 20பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 394 காவலர்கள் காயமடைந்துள்ளனர், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவாசயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாவகையில் லுக்அவுட் நோட்டீஸையும் டெல்லி போலீஸார் வழங்கியுள்ளனர்.
டிராக்டர் பேரணி வன்முறையின்போது, விவசாயிகளில் ஒரு பிரிவினர் பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையில் செங்கோட்டையை முற்றுகையிட்டு அதற்கு நுழைந்தனர். செங்கோட்டையின் கோபுரத்தின் மீது, ஏறி தேசியக் கொடி ஏற்றப்படும் இடத்தில் சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக டெல்லி போலீஸார் தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ஐபிசி 124ஏ பிரிவின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையை டெல்லி போலீஸார் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக டெல்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்தவிவகாரத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து, சமூக ஆர்வலர் லகா சிதானா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டைக்குள் சென்று சீக்கிய மதக்கொடி ஏற்பபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று முதல் வரும் 31-ம் தேதிவரை செங்கோட்டைக்குள் சுற்றுலாப் பயணிகள் யாரும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.