

டெல்லியில் குடியரசுதின நாளன்று நடந்த வன்முறை தொடர்பாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லா வகையில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து டெல்லி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லூக்அவுட் நோட்டீஸ் பெறப்பட்ட விவசாயிகள் தலைவர்கள் அனைவரும் தங்களின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று டெல்லி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் , விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 100-க்கும்மேற்பட்ட போலீஸாரும், விவசாயிகளும் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் 25 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, முதல்கட்டமாக 20 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 394 காவலர்கள் காயமடைந்துள்ளனர், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “ டெல்லி கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
டெல்லி போலீஸார் எடுத்துவரும் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதையடுத்து, முதல்கட்டமாக கலவரத்தை தூண்டிவிட்ட விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் பெயர் உள்ள விவசாயிகள் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லா வகையில் லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 30 முதல் 40 விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களுக்கு எதிராக 25 தனித்தனி முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மத்திய அரசுன் பேச்சுவாரத்்தையில் ஈடுபட்டவர்கள்.
இதில் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் 6 செய்தித்தொடர்பாளர்கள் உள்பட 37 விவசாயிகள் தலைவர்கள் மீது சமயபூர் பாத்லி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜகித் சிங் தாலேவால், பிகேயு தலைவர் பல்பிர் சிங் ராஜேவால், பிகேயு(ராஜேவால்) தலைவர் தர்ஷன் பால், கிராந்திகாரி கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகெய்த், கிகேயு தலைவர் குல்வந்த் சிங் சாந்து, இந்திய ஸ்வராஜ் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பிகேயு தலைவர் பூட்டா சிங் புர்ஜிகில், கீர்த்தி கிசான் யூனியன் தலைவர் நிர்பாய் சிங் துடிகே, பஞ்சாப் கிசான் யூனியன் தலைவர் ரூல்து சிங் மான்ஸா, கிசான் சங்கர்ஷ் கமிட்டி தலைவர் இந்திரஜித் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையக்குள் நுழைந்த விவகாரத்தில் பஞ்சாபி நடிகர் தீப் சித்து, லக்பிர் சிங் சித்தானா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டு செல்லாவகையில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.