

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு மோடி நிர்வாகம் ஒருபாடம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் இருந்து நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரிக்கிறது, வேலையின்மை அளவு அதிகரிக்கிறது என தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் கரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட லாக்டவுனுக்குப்பின் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு 35 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்தில் ஆக்ஃபாம் இந்தியா ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மிகமுக்கியமாக, “லாக்டவுன் காலகட்டத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இந்த சொத்துகளை 13.80 கோடி ஏழைகளுக்குத் தலா ரூ.94 ஆயிரம் வழங்க முடியும்
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் முதல் 11 இடங்களில் இருக்கும் கோடீஸ்வரர்களின் சொத்து, கரோனா காலத்தில் அதிகரித்த அளவுக்கு குறைந்தபட்சமாக ஒரு சதவீதம் வரி விதித்தாலே மத்திய அரசின் ஜன் அவுஷதி திட்டத்துக்கு 140 மடங்கு நிதி ஒதுக்க முடியும்.
2020, ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 1.70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். புள்ளிவிவரங்கள்படி, அம்பானி கரோனா லாக்டவுன் காலத்தில் ஈட்டிய தொகை, அமைப்புசாரா துறையில் உள்ள 40 கோடி பணியாளர்களை வறுமையில் தள்ளும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்திய கோடீஸ்வரர்களில் முதல் 11 இடங்களில் இருப்போரின் சொத்துகள் கரோனா லாக்டவுன் காலத்தில் உயர்ந்த அளவை மட்டும் வைத்துக்கொண்டு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கலாம் அல்லது சுகாதாரத் துறைக்கு 10 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கலாம். அமைப்புசாரா துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12.20 கோடி மக்கள் வேலையிழந்துள்ளார்கள். இதில் 75 சதவீதம் அதாவது 9.20 கோடி வேலை, அமைப்பு சாரா துறையாகும்.
2020 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17 கோடி பெண்கள் வேலையிழந்துள்ளார்கள். லாக்டவுனுக்கு முன், பெண்களிடையே இருந்த வேலையின்மை அளவு தற்போது 15 சதவீதம் அதிகரித்துள்ளது' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆக்ஸ்ஃபாம் அறிக்கையை மேற்கொள் காட்டியும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார்
அதில் “ 3 அல்லது 4 கோடீஸ்வரர்களின் தனிப்பட்ட நலனுக்காகவே பிரதமர் நாட்டை நிர்வாகம் செய்யும்போது இதுதான் நடக்கும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு மோடி அரசின் நிர்வாகம் ஒருபாடம்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது 2 நாட்கள் பயணாக கேரள மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வயநாட்டுக்குச் சென்றுள்ளார்.