

குடியரசு தினத்தன்று
டெல்லியை உலுக்கிய வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு என்பதால் அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சில சமூக விரோத சக்திகள் செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைந்து மதக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; இதன்மூலம் விவசாயிகளின் போராட்டத்தை கெடுக்கும் ஒரு ஒருங்கிணைந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மோடி அரசு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.
இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.
டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார் காயமடைந்தனர் .
இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
புதிய கொள்கைகள் மூலம் விவசாயிகளை வேதனையடையச் செய்தது அவர்களது முதல் வெற்றி. பின்னர் தங்கள் பலத்தைப் பயன்படுத்தி விவசாயிகளை தாக்கினர். அடுத்ததாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களை சோர்வடைய வைத்தது. அதன்பின்னர் அவர்களை பிரித்தாள முயற்சித்தது. இறுதியாக சில குற்றவாளிகள் மூலம் டிராக்டர் அணிவகுப்பில் வன்முறையை உருவாக்கி அந்தப் பழியை விவசாயிகள் மீதே போட்டு அவர்களை அவதூறு செய்தது.
இது முதல் நாளிலிருந்தே அரசாங்கத்தின் கொள்கையாகும், ஆனால் அமைதியான போராட்டங்களை நடத்தும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் மூலம் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான இலக்கிலிருந்து விலகக்கூடாது.
"மோடி அரசாங்கத்தின் உதவியோடு ஒரு ஒருங்கிணைந்த சதித்திட்டம் மூலம் முழு விவசாயிகளின் இயக்கத்தையும் கேவலப்படுத்த முயற்சிகள் நடந்துவருகின்றன. அவர்களை போராட்டத்திலிருந்து வெளியே தள்ளுவதற்காக விவசாயிகள் மீது எஃப்.ஐ.ஆர்களை போடுகிறார்கள். எப்ஐஆர் சத்தத்தில் மூன்று விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டங்களை ரத்து செய்வதற்கான கோரிக்கையை புதைக்கும் பணியும் வேகமாக நடந்துவருகிறது.
வன்முறை மற்றும் கட்டுக்கடங்காத சம்பவங்களில் ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகளை டெல்லி காவல்துறை கைது செய்ய வேண்டும். அதைவிடுத்து அதற்கு பதிலாக, சன்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் மீது தவறான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். செங்கோட்டைக்குள் 500 பேர் கொண்டு கும்பல் ஒன்று நுழைகிறது. ஆனால் அது எப்படி அவ்வளவு போலீஸாரும் வெறும் பார்வையாளர்களாக பேசாமடந்தைகளாக இருந்தார்க்ள். காவல்துறை தடுக்கப்படாமல் 500 பேர் கொண்ட கும்பல் வளாகத்திற்குள் நுழைந்ததா?
இது மிகப்பெரிய அளவில் நடந்துள்ள பாதுகாப்புத்துறை, உளவுத்துறையின் மகத்தான தோல்வி. இந்த தோல்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிட தகுதியுள்ளவர் எவரையும் காரணமாக சொல்லமுடியாது. எனவே அமித் ஷா தாமதமின்றி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்,''
இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.