

மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகரான ராஜ்கபூர் குடும்பத்தின் பங்களா பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ளது. இதை அருங்காட்சியமாக்க பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டுகிறது.
பழம்பெரும் நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர் பிறந்த ’கபூர் ஹவேலி’ எனும் பங்களா பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள டாக்கி முனவர் ஷா பகுதியில் அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன், பஞ்சாபி இந்துவும் போலீஸ் அதிகாரியுமான திவான் பசவேஷ்வர்நாத் கபூர் பெஷாவருக்கு மாற்றலானர்.
இவர், கடந்த 1918 ஆம் ஆண்டு இந்த இடத்தை விலைக்கு வாங்கி 1922 இல் தனது ஹவேலியை கட்டி முடித்தார். இவரது இரு மகன்களில் பிரிதிவீ ராஜ்கபூர் முதன் முதலில் இந்தி திரைப்பட நட்சத்திரமானார்.
இவருக்கு பின் அதே ஹவேலியில் டிசம்பர் 14, 1924 இல் பிறந்த ராஜ்கபூர், பாலிவூட்டின் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் ஆனார். இதனால், 1930-ல் மும்பைக்கு மாறிய கபூர் குடும்பத்தினர் விடுமுறை நாட்களில் மட்டும் ஹவேலிக்கு சென்று தங்கி வந்தனர்.
இதுவும், 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒருநாள் முன்னதாக ஏற்பட்ட இருநாட்டு பிரிவினைக்கு பின் முழுமையாக நின்று போனது. இச்சூழலில், பாகிஸ்தான் அரசின் வசமானது கபூர் குடும்பத்தின் ஹவேலி.
பிறகு, பெஷாவரின் நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்ட கபூர் ஹவேலியை 1968 இல் ஹாஜி குஷால் ரசூல் வாங்கினார். இவரிடம் இருந்து அப்பகுதிவாசியான ஹாஜி இஸ்ரார் ஷா என்பவர் கடந்த 1980 இல் கபூர் ஹவேலியை விலைக்கு வாங்கியிருந்தார்.
மூன்று அடுக்குகளுடன் 40 அறைகள் கொண்ட பிரமாண்டமான பங்களா என்பதால் அதை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குவாடகை விடப்பட்டு வந்தது. பிறகு இஸ்ரார் ஷாவின் மகன் ஹவேலியை இடித்து மால் கட்ட முடிவு செய்தார்.
இதற்காக கடந்த ஜனவரி 2016 இல் ஹவேலியை இடிக்கும் பணியை துவக்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்கபூரின் பாகிஸ்தானிய ரசிகர்கள், அப்பகுதி நிர்வாகத்தை அனுகியுள்ளனர்.
எப்படியாவது ராஜ்கபூரின் ஹவேலியை காக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில், அப்பகுதியின் கைபர் பாக்துங்வா நிர்வாகம், அந்த ஹவேலியை தன் சார்பில் பாதுகாத்து பாரம்பரியச் சின்னமாக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து நீதிமன்ற தலையிட்டின் பேரில் திரைப்படக் காட்சியை போல் கடைசி நேரத்தில் ராஜ்கபூரின் ஹவேலி இடிப்பில் இருந்து தப்பியது. அப்போது ராஜ்கபூரின் மகனான மற்றொரு பாலிவுட் நடிகர் ரிஷிகபூர், தம் குடும்பத்தின் ஹவேலியை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் அரசிற்கு கோரிக்கை வைத்தார்.
இதை நவம்பர் 2018 இல் ஏற்ற பாகிஸ்தான் அரசு தம் அமைச்சர் மூலமாக ரிஷிகபூரிடமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியது. இதற்கான பூர்வாங்க பணிகளில் பாகிஸ்தான் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
இதன் விலை ரூபாய் 1.5 கோடி என நிர்ணயித்து அதை விலைக்கு பெற பேசி வருகிறது. ஆனால், தற்போதைய உரிமையாளரான ஹாஜி அலி சாபீர், அது மிகக் குறைந்த விலை எனக் கூறி தர மறுத்து வருகிறார்.
இந்த விலையில் ஹவேலியின் பாதி நிலம் கூடக் கிடைக்காது என பாகிஸ்தான் அரசிடம் காரணம் கூறியுள்ளார். இதனால், கூடுதலான விலை அளிக்கும்படியும் வலியுறுத்தியதை ஏற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கபூர் குடும்பம்
1931-ல் வெளியான முதல் பேசும் படமான ’ஆலம் ஆரா’வில் நடித்தவர் பிரிதிவி ராஜ்கபூர். இவரது குடும்பத்தில் நான்காவது தலைமுறையாக நடிக்கும் நட்சத்திரங்களும் சேர்த்து மிகப்பெரிய பாலிவுட் குடும்பமாகக் கருதப்படுகிறது.
திரையுலகின் பிரபல நடிகர்கள் பிறந்த மற்றும் வாழ்ந்த பங்களாக்கள் அவர்களின் ரசிகர்களால் மிகவும் முக்கியமான இடமாகக் கருதப்படுவது இயல்பு. இந்தவகையில், சுதந்திரத்திற்கு முன் நம் நாட்டுடன் இணைந்திருந்த பாகிஸ்தானில் பல பாலிவுட்டின் திரையுலக நட்சத்திரங்கள் பிறந்த பங்களாக்கள் அமைந்துள்ளன.
இவர்களில் ராஜ்கபூர் ஹவேலி அமைந்துள்ள பெஷாவரில் பிறந்த மற்றொரு பாலிவுட் பிரபலமான திலீப்குமாரின் வீடும் அவரது நினைவுச் சின்னமாக மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.