டெல்லி வன்முறை எதிரொலி; போராட்டம் வாபஸ்: இரு விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி வன்முறை எதிரொலி; போராட்டம் வாபஸ்: இரு விவசாய சங்கங்கள் அறிவிப்பு
Updated on
1 min read

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இரு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.

இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார் காயமடைந்தனர் .

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் சார்பில் 15 முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டம் திசை மாறியதால் அதனை முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. டெல்லி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் கூறியதாவது:

வேறு யாரோ வழிநடத்துதலுடன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே, அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு இந்த போராட்டத்தில் இருந்து இப்போதே விலகிக் கொள்கின்றன.

எங்களுக்கு எம்எஸ்பி உத்தரவாதம் கிடைக்கும் வரை எதிர்ப்பு தொடரும். ஆனால் எதிர்ப்பு வேறு வடிவத்தில் செல்லாது. மக்கள் உயிரை தியாகம் செய்யவோ அல்லது அடி வாங்கவோ நாங்கள் இங்கு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

சில்லா எல்லையில் போராட்டம் நடத்திய பாரதிய கிசான் யூனியனின் (பானு) தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், ‘‘டெல்லியில் நேற்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியம். எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறோம். நான் மிகுந்த வேதனையடைகிறேன்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in