Last Updated : 27 Jan, 2021 07:04 PM

 

Published : 27 Jan 2021 07:04 PM
Last Updated : 27 Jan 2021 07:04 PM

செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றிய தீப் சிங் சித்து யார்?- பஞ்சாபி நடிகர் குறித்து பரபரப்பான தகவல்

புதுடெல்லி

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதை ஏற்றிய பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து பற்றிப் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி போலீஸாரிடம் விவசாயிகள் பேசியதுபோல் அன்றி, சற்று நேரம் முன்னதாகவும், பாதை மாறியும் டிராக்டர் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனால், பல இடங்களில் கலவரம் வெடித்து ஊர்வலத்தினர் வன்முறையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இப்பிரச்சனையில், விவசாய சங்கத் தலைவர்களில் ஒரு பகுதியினர் பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்து காரணம் எனப் புகார் கூறியுள்ளனர். இவர்தான் ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி ஊர்வலத்தில் மாற்றங்கள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பாரதிய கிஸான் சங்கத்தின் ஹரியாணா மாநிலத் தலைவரான குர்நாம்சிங் கூறும்போது. ''செங்கோட்டை செல்லும் திட்டமே ஊர்வலத்தினருக்கு இல்லை. தீப் சிங் சித்துதான் ஊர்வலத்தில் ஒரு பகுதியினரின் பாதையை மாற்றினார். இது விவசாயிகள் அமைதியாக நடத்தும் போராட்டம். சீக்கிய மதத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை'' எனத் தெரிவித்தார்.

பஞ்சாபி மொழியின் பிரபல நடிகரான தீப் சிங், சட்டக் கல்லூரியில் பயின்றபின் நடிப்பிற்கு வந்தவர். முன்னதாகப் பிரபல மாடலாக இருந்தவர், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனால் பஞ்சாபிகளின் அபிமானத்தைப் பெற்ற சித்து, விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவளித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் பலனாக ஊர்வலத்தினரைச் செங்கோட்டைக்கு அழைத்துச் சென்றவர், அதன் உச்சியில் அத்துமீறிக் கொடியையும் ஏற்றியுள்ளார்.

இதன் மீதான வீடியோவைத் தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய தீப் சிங் குறிப்பிடுகையில், ''சீக்கிய மதத்தின் குருக்களில் ஒருவரான நிஷான் சாஹேபின் கொடியை ஏற்றினேனே தவிர, அருகிலிருந்த நம் தேசியக் கொடியை நான் அகற்றவில்லை.

இந்தக் கொடி குருத்துவாரா கோயில் கோபுரங்களிலும் ஏற்றப்பட்டுள்ளது. ஊர்வலம் குறித்துத் திட்டமிட்ட பாதைகளைப் பின்பற்றத் தேவையில்லை என விவசாய சங்கங்களின் சில தலைவர்கள் முன்கூட்டியே கூறி இருந்தனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் தீப் சிங் கலந்துகொள்ளத் தொடங்கியது முதல், அவர் மீது காலிஸ்தான் தனி நாடு கோரும் அமைப்பின் ஆதரவாளர் எனப் புகார் கிளம்பியது. இதற்காக அவரைத் தேசியப் புலனாய்வு நிறுவனம் நேரில் அழைத்து, கடந்த வாரம் விசாரணை செய்தது.

அதேசமயம், தீப் சிங் பாஜக ஆதரவாளர் எனவும் ஒரு புகார் உள்ளது. இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்திருந்தார். அதன் பிறகு அவருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்டதாக ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், செங்கோட்டை முன்பாகக் கலவரத்தில் ஈடுபட்டதாக 40 விவசாயிகள் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் மீதான சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x