

நாடு முழுவதும் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி, எழுத் தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது விருதுகளை திருப்பி ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தலைமையில், நேற்று குடி யரசு தலைவர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் மாட் டிறைச்சி உண்டவரை, விஷமிகள் அடித்து கொன்றது, எழுத்தாளர் கல்புர்கி படுகொலை உள் ளிட்ட விவகாரங்கள் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இத்தகைய சம்பவங் களை மத்திய பாஜக அரசு தடுக்க தவறிவிட்டதாகவும், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாகவும் கூறி, எழுத்தாளர்கள், கலைஞர்கள் உட்பட 75க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இதற்கு ஒருசாரார் ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு சாரார் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அரசுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி, விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் பிரச்சாரம் செய்வதன் மூலம், நாட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக பாஜக எம்.பி. கிரோன் கேரின் கணவரும், பாலிவுட் நடிகருமான அனுபம் கெர் நேற்று கவலை தெரிவித்தார். மேலும், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக 40-க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுடன் குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக சென்று மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இந்தியா மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட நாடு. சகிப்புத் தன்மை குறைந்து விட்டதாக வெகுசிலரே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது சம்பந்தமாக ஏராளமான எழுத் தாளர்கள், திரைக் கலைஞர்கள் மற்றும் பிரபலங்களை சந்தித்து பேசினோம். அவர்களும் நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதாக கூறுவது ஏற்புடையதல்ல என்று தான் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியா ஒற்றுமை யான நாடு. இங்கு சகிப்புத்தன்மை நிறைந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டவே, இந்த பேரணியை நடத்தினோம். இந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களோ, அல்லது குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவர்களோ அல்ல. இந்தியர்கள் என்ற மனப்பான்மையுடன், இந்தியர்களுக்காக, இந்த பேரணியில் அவர்கள் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய விருது பெற்ற பண்டார்கர் கூறும்போது, ‘‘பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் முன்பே அவரை எதிர்த்தவர்கள்தான், தற்போது நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி, பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை வைத்தே, அவர்களது உள்நோக்கம் என்ன வென்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இதனால், ஒரு சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. அதற்கும் நாங்கள் கண்டனம் தெரிவித்து தான் வருகிறோம் என்றார்.
இந்தப் பேரணியில், மதுார் பண்டார்கர், அசோக் பண்டிட், பிரியதர்ஷன், மனோஜ் ஜோஷி, அபிஜித் பட்டாச்சார்யா, ரவீணா தாண்டன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர் மது கிஷ்வார் உட்பட, 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.