விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு இடமில்லை: ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம்

டெல்லி செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி ஏற்றப்பட்ட காட்சி : படம் உதவி ட்விட்டர்
டெல்லி செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி ஏற்றப்பட்ட காட்சி : படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read


டெல்லியில் விவசாயிகள் சார்பில் நேற்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்களையும், டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டித்துள்ளது. ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு இடமில்லை என்று அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசுதினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.


இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில்ஒருபிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். ெடல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்.

தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி
தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி

டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 83 போலீஸார் காயமடைந்தனர் என்று டெல்லி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டித்துள்ளது.

அந்த அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியி்ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடியரசுதினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது, வருத்தத்திற்குரியது. டெல்லியில் நடந்த வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை.

டெல்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும்”

இவ்வாறு பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in