

அயோத்தியில் உள்ள தானிப்பூரில் மசூதி கட்டும் பணி தேசிய கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தினமான நேற்று சிறப்பாகத் தொடங்கியது.
சன்னி வக்பு வாரியம் சார்பில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்குப்பின் இந்த மசூதி கட்டும்பணி தொடங்கியுள்ளது.
பாபர் மசூதி-ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் அயோத்தியில் மசூதி கட்ட தனியாக 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, ராமஜென்மபூமி பகுதியிலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள தானிப்பூர் எனும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு முஸ்லிம் வக்பு வாரியத்திடம் வழங்கியது. இந்த மசூதியை கட்டுவதற்காக முஸ்லிம் வக்பு வாரியம், இந்திய-இஸ்லாமிய கலாச்சார அமைப்பை உருவாக்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம்தேதி இந்த மசூதியின் வரைபடத்தையும் வக்பு வாரியம் வெளியி்ட்டது.
இந்த மசூதியில் தொழுகைக்கானதாக மட்டும் அல்லாமல் மருத்துவமனை, நூலகம், கல்வி நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அடங்கிய மக்களுக்கு பயன்படும் இடமாக இருக்கும் என வக்பு வாரியம் தெரிவித்தது.
அயோத்தி மசூதி கட்டும் திட்டம் குடியரசு தினமான நேற்று முறைப்படி தொடங்கியது. அறக்கட்டளையின் தலைவர் ஜூபர் அகமது பரூக்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், அறக்கட்டளை உறுப்பினர்கள் 9 பேர் 9 மரக்கன்றுகளை நட்டு வைத்து கட்டிடப்பணியைத் தொடங்கி வைத்தனர்.
இந்திய-இஸ்லாமிய கலாச்சார அமைப்பின் செயலாளர் ஆதார் ஹூசைன் கூறுகையில் “ இந்த புதிய மசூதி, பழைய பாபர் மசூதியைவிட பெரிதாக இருக்கும். இங்கு ஒரு மருத்துவமனையும் அமைக்கப்பட உள்ளது.
இஸ்லாமிய மதம் போதிக்கும், 1400 ஆண்டுகளுக்கு முன் இறைதூதர் முகமது நபி மக்களுக்கு போதித்த உண்மையான மனிதநேயத்தை பறைசாற்றும் வகையில், இந்த மருத்துவமனை அமையும். இந்த மருத்துவமனை சாதாரண கான்கிரீட் கட்டிடத்தைப்போன்று அல்லாமல், மசூதி மாதிரியாகவும், இஸ்லாமிய தத்துவங்களை போதிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படும்.
இந்த மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள், இலவசமாக சிகிச்சை போன்றவை இருக்கும். கடந்த 70 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்குவந்த நாளில் இந்த மசூதிகட்டும் பணியைத் தொடங்கியுள்ளோம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் பன்முகத்தன்மை கொண்டது. அதன் அடிப்படையில் மசூதிதிட்டம் அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.