Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

குடியரசு தினப் பேரணியில் ராமர் கோயில் மாதிரி வடிவம்

குடியரசு தின பேரணியில் ராமர்கோயிலின் மாதிரி வடிவம் இடம்பெற்றது. அப்போது, அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்கள் பெரும்பாலோர் எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்தனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நேற்று பல்வேறு மாநிலங்களின் கலை, கலாச்சாரத்தை விளக்கும் வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு வாகனங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தது. உத்தரபிரதேச அரசு சார்பில் வந்த வாகனத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் மாதிரி வடிவம் இடம்பெற்றது. அப்போது, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் பலரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர். மேலும், ராமாயணக் காட்சிகளை விளக்கும் சித்திரங்கள், அயோத்தியில் கொண்டாடப்படும் தீப உற்சவ விழா காட்சிகள், ராமாயணத்தை இயற்றிய வால்மீகியின் பெரியசிலை ஆகியவையும் இடம்பெற்றன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 2023-ம் ஆண்டுக்குள் கோயிலை கட்டி முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. உ.பி. மாநிலஅரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அயோத்தி நமது புனிதமான இடம். ராமர் கோயில் என்பது மக்களின் உணர்வுபூர்வமான, நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம்.மக்கள் மதிக்கும் நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் விளக்கும் வகையில் உபி. அரசின் சார்பில் ராமாயணக் காட்சிகளும் வாகன அணிவகுப்பில் இடம்பெற்றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x