

அயோத்தியில் கட்டப்படும் மசூதிக்கு சென்னப் பட்டினத்தின் நவாப் முகம்மது அலி கானின் மகன் மவுல்வி அஹமதுல்லா ஷா பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர்நிலத்தில் உத்தரபிரதேச சன்னிமுஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் இந்தோ – இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (ஐஐசிஎப்) சார்பில் மசூதி கட்டப்படுகிறது. அயோத்தி மசூதிக்கு ஈடான அதற்கு மீண்டும் பாபரின் பெயர் வைக்கப்படாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மசூதிக்கு சுதந்திரப் போராட்ட வீரரான மவுல்வி அஹமதுல்லா ஷாவின் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஐசிஎப் செயலாளர் அத்தர் உசைன் கூறும்போது, “நாட்டின் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான மவுல்வி அஹமதுல்லா ஷாவின் பெயரை மசூதிக்கு வைக்க தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இவரது பெயர் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
ஆங்கிலேயரை நம் நாட்டிலிருந்து விரட்டுவதற்காக 1857-ம் ஆண்டு மே 10-ல் விடுதலைப் போர் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இவற்றில் முக்கியமானது அவத் பிரதேசத்தின் (தற்போதைய உ.பி.)லக்னோ அருகில் நடைபெற்ற சின்ஹாட் போர். முஸ்லிம் துறவியான மவுல்வி அஹமதுல்லா ஷா,1857, ஜூன் 30-ல் இப்போரை தலைமையேற்று நடத்தினார். இதற்காக, அவர் ‘ஜிஹாத் (அறப்போர்)’ குரலுக்கு முஸ்லிம்கள் ஆயுதங்கள் ஏந்திப் போரிட்டனர். இந்துக்களும் தங்கள் மதத்தை காக்க ஜிஹாத் செய்யும்படி அவர் விடுத்த அழைப்பு ஏற்கப்பட்டது.
ராஜஸ்தானின் டோங்க் பகுதியிலிருந்து பொதுமக்களையே படையாக திரட்டத் தொடங்கினார்மவுல்வி ஷா. வழியெங்கும் ஆங்கிலேயருடன் போரிட்டபடி ஆக்ரா வழியாக அவத் பகுதியில் நுழைந்தார். கான்பூரை கடந்து அயோத்தி அருகிலுள்ள பைஸாபாத்துக்கும் வந்தார். பைஸாபாத்தின் சோக் பகுதியின் சராய் மசூதியில் தனது தலைமையகம் அமைத்தார். பிறகு தன் படையுடன் லக்னோவின் சின்ஹாட்டுக்கு வந்து ஆங்கிலேயருடன் கடுமையாகப் போரிட்டு வென்றார். அப்போது அவத் பகுதியை ஆட்சிசெய்த நவாப் பிர்ஜிஷ் கதர் என்பவரின் தாயான பேகம் ஹசரத் மெஹலும் தனது படையை அனுப்பிமவுல்வி ஷாவுக்கு உதவினார்.
சின்ஹாட் போர் குறித்து ஜி.பி.மலீஸன் என்ற ஆங்கிலேயர் தனது, ‘1857 இண்டியன் ரிவால்ட்’எனும் நூலில் மவுல்வி ஷாவைபற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஒரு துறவியாக இருந்து சின்ஹாட் போரில் வென்ற மவுல்வி ஷா, ஜூன் 5, 1858-ல் ஒரு ஆங்கிலேய உளவாளியின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார். புரட்சியாளர்களின் கலங்கரை விளக்கம் எனவும் அழைக்கப்படும் இவர், அக்கால சென்ன பட்டினத்தின் நவாப் முகம்மது அலி கானின் மகன் ஆவார்.
இவரைப் பற்றி பல ஆய்வுகள் செய்துள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் பர்வேஜ் நசீர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “இவரது இயற்பெயர் சையத் அகமது அலி கான். ஜியாவுத்தீன் என்றும் அழைக்கப்படும் இவர் தனது தந்தையால் அரசவை பயிற்சிக்காக ஹைதராபாத் நிஜாமிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்த ஒரு ஆங்கிலேயர் அவரது திறமையை கண்டு வியந்து மவுல்வியை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அரசியல் பாடங்களையும் கற்ற மவுல்வி ஷா, இங்கிலாந்து அரசரையும் சந்தித்து பேசி வந்தார். அங்கிருந்து மெக்கா, மதீனாசென்ற அவர் இந்தியா திரும்பினார். பிறகு ராஜஸ்தானின் சாம்பார் எனும் இடத்தில் இருந்த சூபிதுறவியான சையத் புர்கான் அலி ஷாவை சந்தித்து காதிரி வழியிலான துறவறம் பூண்டு, மவுல்வி அஹமதுல்லா ஷா என்றானார். அங்கிருந்து குவாலியரில் இருந்த மெஹராப் ஷா எனும் சூபியையும் சந்தித்தார். அவரது அறிவுரையின் பேரில் ஆங்கிலேயரை எதிர்த்து குரல் கொடுத்தார்” என்றார்.
கட்டுமானப் பணி தொடங்கியது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மசூதி கட்டுவதற்கு அயோத்தி அருகே தனிப்பூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு மசூதி கட்ட உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியம் சார்பில் இந்தோ இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (ஐஐசிஎப்) அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு தனிப்பூரில் தேசியக்கொடி ஏற்றிவைத்து, தேசிய கீதம் பாடி வணங்கப்பட்டது. பிறகு ஐஐசிஎப்-ன் 9 உறுப்பினர்களும் 9 வகை மரக்கன்றுகளை நட்டு மசூதி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தனர். எளிய முறையில் நடைபெற்ற இவ்விழாவில் ஐஐசிஎப்-பின் 9 உறுப்பினர்கள், அப்பகுதி முஸ்லிம்கள் என சுமார் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஐஐசிஎப் தலைவரான ஜபர் பரூக்கி கூறும்போது, “குடியரசு தினத்தில் மசூதிக்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை கட்டும்போது சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன் வரைபடங்களுக்கு அரசு அங்கீகாரமும் கிடைத்தபின் மண் சோதனையிட்டு தீவிரப்பணிகள் நடைபெறும்” என்றார்.