Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

ஆந்திராவில் மூட நம்பிக்கை காரணமாக 2 மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

திருப்பதி

ஆந்திராவில் மூட நம்பிக்கையால் தங்களுடைய 2 மகள்களை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்த பெற்றோரை நேற்று போலீஸார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், திருப்பதியை அடுத்துள்ள மதனபல்லி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் புருஷோத்தம் நாயுடு (56), இவரது மனைவி பத்மஜா (53). இவர் தனியார் கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு அலக்யா (27), சாய் திவ்யா (22) என்கிற 2 மகள்கள் இருந்தனர். அலக்யா போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இவர் கரோனா தொற்று விடுப்பில் வீட்டில் இருந்தார். 2-ம் மகளான சாய் திவ்யா, பிபிஏ படித்து முடித்து சென்னையில் இசை பயின்று வந்தார்.

புருஷோத்தம் நாயுடுவின் குடும்பம் கடந்த ஆண்டு மதனபல்லி சிவாநகரில் புதிதாக வீடு கட்டி குடி வந்தனர். இவரகளது வீட்டில் அடிக்கடி பூஜைகள் நடப்பது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இளைய மகள் சாய் திவ்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி உள்ளூர் மந்திரவாதிகள் இருவரை வீட்டுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்து தாயத்து கட்டியுள்ளனர். பின்னர், மகள்களை நரபலி கொடுப்பதன் மூலம் புதிதாக பிறப்பார்கள் என நம்பிய அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரையும் கொலை செய்துள்ளனர். நள்ளிரவில் மகள்கள் இருவரும் அலறும் சத்தத்தை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். ஆனால், இதனை யாரும் கண்டுகொள்ள வில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். பின்னர், பெற்றோர் முன்னிலையில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அப்போது புருஷோத்தம் நாயுடு தனது தலையில் அடித்துக்கொண்டவாறு, “ அய்யோ எனது பிள்ளைகளை அநியாயமாக கொன்று விட்டோமே” என கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால், தாயார் பத்மஜா மட்டும் முகத்தில் எவ்வித சலனமும் இன்றி எரியும் சடலங்களை பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தார்.

பின்னர், இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை மதனபல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவர்களை 14 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், மருத்துவ சிகிச்சை அளித்த பின்னர் காவலில் வைக்கும்படி நீதிபதி கூறியதின் பேரில், இருவருக்கும் முதலில் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கு பத்மஜா ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது அவர் கூறும்போது, “நானே சிவன். எனக்கு எதற்கு கரோனா பரிசோதனை? நான் தான் கரோனா தொற்றை இந்த உலகில் பரவ செய்தேன். உலகம்முழுவதும் குப்பை ஆகி விட்டதால்தான் அப்படி செய்தேன்" எனபிதற்றினார். ஒருவழியாக இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, மதனபல்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x