Last Updated : 26 Jan, 2021 01:45 PM

 

Published : 26 Jan 2021 01:45 PM
Last Updated : 26 Jan 2021 01:45 PM

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள் வீச்சு; போலீஸார் தடியடி: மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

டெல்லி ஐடிஓ பகுதியில் போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. தடியடியும் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 11-சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகளுக்கு போலீஸார் தரப்பில் இன்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மத்திய டெல்லி பகுதிக்குள் வராமல் புறநகர் பாதையில் செல்ல வேண்டும் என விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு மேல்தான் பேரணி தொடங்கவும் விவசாயிகளுக்கு போலீஸார் அனுமதி அளித்திருந்தார்கள்.

போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்

இன்று காலை முதலே திக்ரி, காஜிப்பூர், சிங்கு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக டெல்லி நோக்கி வரத் தொடங்கினர். திக்ரி எல்லையில் போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகளில் ஒரு தரப்பினர் செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால், அதையும் மீறி விவசாயிகள் டெல்லி நகருக்குள் சென்றனர்.

அதேபோல, முபாரக் சவுக் பகுதியில் விவசாயிகள் ஏராளமானோர் கூடினர். அங்கு போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து, போலீஸார் வாகனங்களில் மீது ஏறிச் செல்ல முயன்றனர். இதைத் தடுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டபோது, விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசிக் கலைத்தனர்.
ஆனால், மத்திய டெல்லி பகுதிக்குள் நுழைவோம் என விவசாயிகளில் ஒரு தரப்பினர் தொடர்ந்து போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே டெல்லி அக்ஸர்தாம் கோயில் பகுதியில் போலீஸாருக்கும், நிஹாங்ஸ் என அழைக்கப்படும் சீக்கியப் பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தினரைக் கலைத்தனர். இதேபோல, ஷாதாரா பகுதியில் உள்ள சிந்தாமணி சவுக் பகுதியில் விவசாயிகள் போலீஸாரைத் தாக்க முயன்றதையடுத்து தடியடி நடத்தப்பட்டது.

டெல்லி ஐடிஓ பகுதியல் தடுப்புகளை மீறிசெல்லும் விவசாயிகள்

நாடாளுமன்றத்தில் சில கிலோ மீட்டர் பகுதியில் உள்ள டெல்லி ஐடிஓ பகுதிக்குள் விவசாயிகளில் ஒருதரப்பினர் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டினர். நாங்கோலி சவுக், முபாரக் சவுக் பகுதியில் போலீஸாரின் தடுப்புகளை உடைத்து, விவசாயிகள் நுழைந்தனர்.

மேலும், டெல்லி ஐடிஓ, போலீஸ் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் மீது விவசாயிகளில் ஒரு தரப்பினர் கல்வீசித் தாக்குதல் நடத்தி, சேதப்படுத்தினர். ஐடிஓ பகுதியில் போலீஸ் ஒருவரைப் போராட்டக்கார்கள் சிறைப்பிடித்துத் தாக்கினர். ஆனால் விவசாயிகளில் ஒரு பிரிவினர் அவரை மீட்டு, பாதுகாப்பாக போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதால், டெல்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. சமய்பூர் பாத்லி, ரோஹினி செக்டார், ஹெய்த்பூர் பத்லி, ஜஹாங்கிர் புரி, ஆதர்ஷ் நகர், ஆசாத்பூர், மாடல்டவுன், ஜிடிபி நகர், விஸ்வா வித்யாலயா, விதான் சபா, சிவில்லைன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பச்சை வழித்தடத்தில் உள்ள லால் குவில்லா, இந்திர பிரஸ்தா, ஐடிஓ ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x