

கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீன ராணுவத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் ராணுவப் படைக்கு தலைமை தாங்கி சீன ராணுவத்தை எதிர்த்து சண்டையி்ட்டு வீரமரணம் அடைந்த கர்னல் பிகுமலா சந்தோ பாபுவுக்கு ராணுவத்தின் 2-வது உயர்ந்த விருதான மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
வீரர்கள் நயிப் சுபேதார் நாதுராம் சோரன், ஹவில்தாரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான கே.பழனி, நாயக் தீபக் சிங், சிப்பாய் குர்தேஜ் சிங் ஆகியோர் சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்தனர். இவர்கள் 4 பேருக்கும் வீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட உள்ளன. 3-மீடியம் ரெஜிமண்டைச் சேர்ந்த ஹவில்தார் திஜேந்தர் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவம் தரப்பிலும் இதே அளவில் வீரர்கள் மரணமடைந்தாலும் அதுகுறித்து சீன ராணுவம் ஏதும் தெரிவிக்கவி்ல்லை.
இதில் இந்தியத் தரப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக கல்வா பள்ளத்தாக்குப்பகுதியில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில் வீரமரணம் அடந்த வீரர்களுக்கு விருதுகளை மத்திய அரசு அறிவித்து குடியரசுதினமான இன்று வழங்க உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் “16 பிஹார் ரெஜிமெண்ட்டுக்கு தலைமை தாங்கிய கர்னல் பாபு, சீன ராணுவத்துடன் நடந்த ஆக்ரோஷமான மோதலில், படுகாயமடைந்து வீரமரணம் அடைந்தார். சீன ராணவத்தினரை இந்திய எல்லையில் இருந்து விரட்டவும், அத்துமீறாமல் தடுக்கவும் பாபுவின் பங்குமிகப்பெரியது. பாபுவின் சிறப்பான தலைமையைப் போற்றும் வகையில் அவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
16 பிஹார் ரெஜிமெண்ட்டில் இருந்த சுபேதார் நாதூராம் சோரன், சகவீரர்களை காக்க முயன்று வீரமரணம் அடைந்த ஹவில்தார் பழனி, 16 பிஹார் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த நாயக் தீபக் சிங், பஞ்சாப் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் குருதேஜ் சிங் ஆகியோர் வீரமரணம் அடைந்த நிலையில் அவர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.