எந்தப் பகுதியில் இருந்தும் தேர்தலில் வாக்களிக்க விரைவில் புதிய முறை: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்

எந்தப் பகுதியில் இருந்தும் தேர்தலில் வாக்களிக்க விரைவில் புதிய முறை: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்
Updated on
1 min read

வாக்காளர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லாமல் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நகரங்களில் இருந்தும் வாக்களிக்கும் புதிய முறைக்கான (ரிமோட் ஓட்டிங்) சோதனைகள் விரைவில் தொடங்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

11-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியிருப்பதாவது:

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைதூரத்தில் இருந்து வாக்களிப்பது குறித்த ஆராய்ச்சித் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அங்கிருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறைக்கான (ரிமோட் ஓட்டிங்) சோதனைகள் விரைவில் தொடங்கும்.

இதுகுறித்து சென்னை ஐஐடியுடன் தேர்தல் ஆணையம் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த தொகுதியில் தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு செல்லாமல் தாங்கள் இருக்கும் இடத்தில் தொலைதூர நகரங்களில் இருந்தபடியே வாக்களிக்க முடியும். இது தொடர்பான ஆராய்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சோதனைகள் தொடங்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை விரிவுபடுத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் யோசனை மத்திய சட்ட அமைச்சகத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in