Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன ராணுவ ஊடுருவல் முறியடிப்பு: கைகலப்பில் 20 சீன வீரர்கள் படுகாயம்

சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்திய தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

கடந்த 2017 ஜூன் மாதம் சிக்கிம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். 72 நாட்கள் நீடித்த போர்ப் பதற்றத்துக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அமெரிக்க உளவுத் துறை உறுதி செய்தது.

லடாக்கின் காரகோரத்தில் இருந்து வடகிழக்கின் அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய - சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. லடாக் மற்றும் வடகிழக்கில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

கடந்த 20-ம் தேதி சிக்கிமின் கிழக்குப் பகுதியான நதுலா எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்திய ராணுவ தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 20-ம் தேதி நதுலா எல்லைப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மிகச்சிறிய கைகலப்பு ஏற்பட்டது. இரு நாடுகளின் மூத்த தளபதிகள் பிரச்சினைக்கு தீர்வு கண்டனர்" என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

சிக்கின் நதுலா எல்லை, சுமார் 5,270 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். இங்கு இந்தியா, சீனா, பூடான் எல்லைகள் சந்திக்கின்றன. இந்த எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே கைகலப்பு மட்டுமே ஏற்பட்டது. துப்பாக்கிச் சண்டை நடைபெறவில்லை என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன அரசு விளக்கம்

எல்லை மோதல் குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜா லிஜியன் கூறும்போது, "எல்லை மோதல் தொடர்பாக எனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனினும், எல்லைப் பகுதியில்அமைதியையும் ஸ்திரதன்மை யையும் ஏற்படுத்த சீனா உறுதிபூண்டுள்ளது. இதே அணுகு முறையை இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைய இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x