

ஐஐடி பட்டமளிப்பு விழாவில், நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து தான் பேசியது சரியானதே என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளை விட இந்தியாவின் மிகப்பெரிய பலம் ஜனநாயகம். இந்த மிகப்பெரிய நலனை நாம் தேவையற்ற சர்ச்சைகளில் இழந்து விடகூடாது என்கிறார் ரகுராம் ராஜன்.
புளூம்பர்க் செய்திகளுக்கு அவர் கூறும்போது, “என்னுடைய அன்றைய உரை ‘இங்கே, இப்போது’ என்ற உடனடி நிலவரத்தையோ, இப்போதைய போக்குகள்குறித்தோ அல்ல. உரையாடல் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, நாம் ஏற்கெனவே கொண்டுள்ள நன்மைகளை அதிகப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே அன்றைய எனது உரை கவனம் செலுத்தியது.
நாம் ஏற்கெனவெ கொண்டுள்ள நலன்களின் அடிப்படையில் இந்த வெளிப்படையான சமூகத்தை பாதுகாப்பது அவசியம் என்பதுடன் இதனை மூடுண்ட அமைப்பாக மாற்றும் முயற்சிகளை தடுக்க வேண்டும் என்பதே என் பேச்சின் மையம்.
ஜனநாயகமே இந்தியாவின் மிகப்பெரிய பலம், எனவே அனைவரும் கொஞ்சம் அமைதி காத்து ஆரோக்கியமான உரையாடலை வளர்த்தெடுக்க பாடுபடுவோம்.
ஒருவரை எதிர்த்து மற்றொருவர் எப்போதும் சப்தம் போட்டுக் கொண்டேயிருந்தால் உரையாடல் நடக்க முடியாது.
கருத்துகளுக்கு இடையிலான மோதல் இருக்கட்டும், நாம் என்ன நினைக்கிறோமோ அதனைக் கூற நாம் ஒருவரையொருவர் தடுக்க வேண்டாம்.
தீவிர இடதாக இருக்கட்டும் அல்லது தீவிர வலதாக இருக்கட்டும், ‘நான் விரும்புவதை நீ கூறாவிட்டால் நான் உன் வாயை அடைப்பேன்’ என்று இருவரும் கூறுவது நல்லதல்ல” என்று கூறுகிறார் ரகுராம் ராஜன்.