Last Updated : 25 Jan, 2021 07:25 PM

 

Published : 25 Jan 2021 07:25 PM
Last Updated : 25 Jan 2021 07:25 PM

வேளாண் விரோதச் சட்டத்துக்குத் தமிழக அரசு ஆதரவு அளித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்: டெல்லி போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு

புதுடெல்லி

டெல்லியில் காஜிபூர் எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று கலந்துகொண்டனர். இதில் அக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், வேளாண் விரோதச் சட்டத்திற்குத் தமிழக அரசு ஆதரவு அளித்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போராட்ட மேடையில் பேசியதாவது:

''டெல்லியில் நடைபெற்று வருவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். இதற்குத் தமிழகத்தில் இருந்து விவசாயிகள் சார்பாக ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கே நான் வந்திருக்கிறேன். அதானிக்கும், அம்பானிக்கும் மோடி போராடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயல்கிறார். காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தைப் பறிகொடுக்கப் போராடுகிறார்.

ஆனால், விவசாயிகள் நடத்துவது 120 கோடி மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம். அரசியலமைப்புச் சட்டத்தையும் காந்தி பெற்ற சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகப் போராட்டம் நடத்துகிறோம். உங்கள் போராட்டத்திற்குக் குமரி முதல் காஷ்மீர் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களும் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துகிற உங்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராடி வருகிறோம். தொடர் போராட்டங்களில் 60 தினங்களாக ஈடுபட்டு வருகிறோம்.

அதே நேரத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்திருக்க மாட்டார். ஆனால். அவரது மறைவையொட்டி முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, சுயநலத்திற்காக, இந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரித்தது. இதற்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன். இதற்காகத் தமிழக விவசாயிகள் சார்பில் உங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன்.

வேளாண் சட்டத்தைக் கைவிட்டு மக்களுக்காக மோடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் மோடியை மாற்றுவதற்கு இந்திய விவசாயிகள் தயாராகி விட்டார்கள் என நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

தமிழகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பதும், டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ளும் விவசாயிகளைக் காவல்துறையைக் கொண்டு தடுக்க முயல்வதும் கண்டிக்கத்தக்கது.''

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு தினங்களாக டெல்லி போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். இக்குழுவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் சரவணன், மதுரை மாவட்டச் செயலாளர் மேலூர் அருண், முன்னணி நிர்வாகிகளான சுதா தர்மலிங்கம், தவமணி, கணேசன், நாகை சபா உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x