

கரோனா தடுப்பூசி பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தெரிவித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த சனிக்கிழமை திருப்பதிக்கு வந்தார். பின்னர் இவர், சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து திருமலைக்கு இரவு வந்தடைந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சனிக்கிழமை இரவு திருமலையில் தங்கிய ஆளுநர் தமிழிசை, நேற்று காலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தரிசன ஏற்பாடுகளை செய்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், புத்தாண்டு காலண்டர்கள், டைரிகளை வழங்கி கவுரவித்தனர்.
பின்னர் அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது, "கரோனா தடுப்பு மருந்தை நாம் வெளி நாடுகளில் இருந்து வாங்காமல், நம் நாட்டிலேயே கண்டுபிடித்து நம்மக்களுக்கு வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். கரோனா தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இதுகுறித்த வீண் வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.
அதன் பின்னர் திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பொன்விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது:
கரோனா தொற்று பரவும் சமயத்தில், தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது முழு சேவையை அளித்தது என்வாழ்நாளில் மறக்க முடியாததாகும். இதற்காக அவர்கள் தங்கள் குடும்பத்தையும், உற்றார், உறவினர்கள், நண்பர்களையும் கூட விட்டு விலக வேண்டியதாகி விட்டது. இவ்வளவு கஷ்டப்பட்ட நமக்கு, நம் நாட்டிலேயே கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து தற்போது அது வெற்றிகரமாக அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருவதை நினைத்தால் பெருமையாக உள்ளது. அனைவரும் தைரியமாக முன்வந்துகரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் மட்டுமே நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர், தமிழிசை தனது குடும்பத்தாருடன் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று தாயாரை தரிசித்தார். இதனை தொடர்ந்து காளஹஸ்தி சென்று வாயுலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தார்.