உச்ச நீதிமன்ற 43-வது தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமனம்: டிச.3-ல் பதவியேற்பு

உச்ச நீதிமன்ற 43-வது தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமனம்: டிச.3-ல் பதவியேற்பு
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி தீரத் சிங் தாக்கூர் (63) 43-வது தலைமை நீதிபதியாக இன்று நியமிக்கப்பட்டார். இவர் டிசம்பர் 3-ம் தேதி பதவியேற்க உள்ளார். 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ல் ஓய்வு பெறுவார்.

தற்போது தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.தத்து டிசம்பர் 2-ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இந்தப் பதவிக்கு டி.எஸ்.தாக்கூர் பெயரை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தத்து பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 124-வது பிரிவின் 2-வது சரத்து வழங்கி உள்ள அதிகாரத்தின் கீழ், தீரத் சிங் தாக்கூரை அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம், ஊழல் புகார் குறித்த வழக்கில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) திருத்தி அமைத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை வகித்தவர் டி.எஸ்.தாக்கூர். மேலும் இவர் தலைமையிலான அமர்வு, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையையும் கண்காணித்து வருகிறது.

வாழ்க்கை குறிப்பு

1952-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி பிறந்த தாக்கூர், 1972-ல் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய இவர், சிவில், கிரிமினல், வரி மற்றும் அரசியல் சாசனம் உட்பட அனைத்து விதமான வழக்குகளையும் கையாண்டுள்ளார்.

1994-ல் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், அதே ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த டி.எஸ்.தாக்கூர், 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in