Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

விவசாய சங்கத் தலைவர்களை கொல்ல சதி; பிடிபட்ட முகமூடி அணிந்த நபர் மீது விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடத்தில் பிடிபட்ட முகமூடி அணிந்த நபர், விவசாயிகள் சங்க தலைவர்களை கொல்லவும் டிராக்டர் பேரணியை தடுத்து நிறுத்தவும் திட்டமிட்டுள்ளார் என்று விவசாயிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம்நடத்தி வரும் விவசாயிகள் 26-ம் தேதிடெல்லியில் குடியரசு தின விழா நடைபெறும் போது, மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லைப்பகுதியில் போராட்டம் நடக்கும் இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு முகமூடி அணிந்த நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்துள்ளார். தோராயமாக 21 வயது இருக்கும் அந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர்அவரை ஹரியாணா போலீஸில் ஒப்படைத்தனர். அதற்கு முன்னர் செய்தியாளர்கள் முன்னிலையில், மர்ம நபர் வாக்குமூலத்தை வாங்கி உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது. அதன் ஒரு அங்கமாகவே முகமூடி அணிந்தநபர் போராட்டக் களத்தில் புகுந்துள்ளார். அவரிடம் நாங்கள் விசாரணை நடத்தியதில், 2 பெண்கள் உட்பட 10 பேர் போராட்டக் களத்துக்குள் புகுந்துள்ளதாகவும், போராட்டத்தை எப்படி சீர்குலைப்பது, வன்முறை ஏற்படுத்துவது என்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள டிராக்டர் பேரணியையும் தடுத்து நிறுத்த இவர்கள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். அதற்கு முன்னதாக 24-ம் தேதியே விவசாய சங்கங்களின் 4 தலைவர்களை கொலைசெய்யவும் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. போராட்டத்தை சீர்குலைக்க இவர்களுக்கு ராய்காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதீப் சிங் என்பவர் பயிற்சி அளித்துள்ளதாக முகமூடி அணிந்த நபர் கூறுகிறார்.

டெல்லியில் 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் போது, முதலில் அதை தடுத்து நிறுத்த போலீஸார் முயற்சிப்பார்கள். அதையும் மீறி பேரணி தொடர்ந்தால், துப்பாக்கிச் சூடு நடைபெறும் என்று பிடிபட்ட நபர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால், ராய் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக, விவேக் மாலிக் என்பவர் பதவி வகிக்கிறார். முகமூடி அணிந்த நபர் கூறியதாக விவசாயிகள் தெரிவிக்கும் பிரதீப் சிங் பெயரில் போலீஸ் அதிகாரி யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், விவசாயிகள் சங்க தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘பிடிபட்ட மர்ம நபர் விவசாயிகள் சங்கதலைவர்கள் 4 பேரின் புகைப்படங்களை அடையாளம் கண்டு, அவர்களைதான் கொல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்” என்றார்.

மிரட்டி பொய் தகவல் சொல்ல சொன்னார்கள்- போலீஸ் விசாரணையில் இளைஞர் தகவல்

ஹரியாணா மாநில சோனிபட் போலீஸார் கூறியதாவது: போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ஒப்படைத்த அந்த இளைஞருக்கு 19 வயதுதான் ஆகிறது. அவருடைய பெயர் யோகேஷ். அவரிடம் விசாரணை நடத்தியதில், விவசாயிகள் அவரை கடத்தி, அடித்து துன்புறுத்தியாக கூறுகிறார். அவரை தலைகீழாக கட்டி தொங்க விட்டு அடித்துள்ளாகவும், மது கொடுத்து கட்டாயப்படுத்தி அருந்த சொல்லியதாகவும் தெரிவித்துள்ளார். போராட்டத்தை சீர்குலைக்கவும், விவசாய சங்கத் தலைவர்களை கொல்லசதி நடப்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் பொய் தகவல்களை சொல்ல வேண்டும் என்று விவசாயிகள் மிரட்டியதாக கூறுகிறார். அப்படி செய்யாவிட்டால், கொலை செய்துவிடுவோம். அது யாருக்கும் தெரியாது என்று விவசாயிகள் மிரட்டியதாக யோகேஷ் கூறுகிறார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சோனிபட் போலீஸார் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x