

கொல்கத்தா: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பிறந்த நாளையொட்டி வடக்கு கொல்கத்தா ஷ்யாம் பஜார் பகுதியிலிருந்து நகரின் சிவப்பு சாலையில் உள்ள நேதாஜி சிலை வரை முதல்வர் மம்தா தலைமையில் நேற்று பேரணி நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
ஒரு காலத்தில் நம் நாட்டின் தலைநகராக கொல்கத்தா இருந்தது. ஆங்கிலேயர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் கொல்கத்தாவில் இருந்து ஆட்சி செய்துள்ளனர். எனவே கொல்கத்தாவை நாட்டின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். நம் நாட்டுக்கு ஏன் ஒரே ஒரு தலைநகரம் மட்டுமே இருக்க வேண்டும்? நாட்டின் 4 மூலைகளிலும் சுழற்சி அடிப்படையில் 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும். 4 தலைநகரங்களிலும் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற வேண்டும். இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும்.
ஒரு தலைநகரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் ஏற்படுத்த வேண்டும். உ.பி., பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை உள்ளடக்கி ஒரு தலைநகரமும், பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்காக ஒரு தலைநகரமும் இருக்க வேண்டும். மற்றொரு தலைநகரை வடகிழக்கில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.