Last Updated : 23 Jan, 2021 10:58 AM

 

Published : 23 Jan 2021 10:58 AM
Last Updated : 23 Jan 2021 10:58 AM

அசோக் கெலாட்- ஆனந்த் சர்மா இடையே மோதல்: காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: கோப்புப் படம்.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பாக காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இடையே கடும் வாக்குவாதம் நடந்து இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய அதிருப்தி தலைவர்களைக் கண்டித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாகவும், அதற்குப் பதிலடி கொடுத்து ஆனந்த் சர்மா பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே ராகுல் காந்தி தலையிட்டுச் சமாதானம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தபின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆகியும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை எனக் கூறி குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள் சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் 5 பேர் கொண்ட தேர்தல் தலைமைக் குழுவை சோனியா காந்தி அமைத்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலை வரும் ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைமைக்குத் தேர்தல் நடத்தக் கோரி கடிதம் எழுதிய 23 தலைவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக காரியக் கமிட்டிக் கூட்டம் எந்தவிதத் தேர்தலும், சண்டையும் இல்லாமல் நடந்தது. ஆனால், திடீெரன தேர்தல் நடத்தக் கோரி ஒருதரப்பினர் கூறுகிறார்கள் என்று கெலாட் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கெலாட் காட்டமாகப் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியினர் சொந்தத் தலைமை மீதே குறை சொல்வதையும், விமர்சிப்பதையும் தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள பிரச்சினைகளைத் தலைமையிடம் விட்டுவிட்டு, உறுப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துச் செயல்பட வேண்டும். சில தலைவர்கள் அடிமட்டத்திலிருந்து வளராமல் நேரடியாகப் பெரிய பதவிக்கு வருவதற்குத் தேர்தலில் போட்டியின்றி வருவதற்கு முயல்கிறார்கள்” எனப் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் ஆகியோரை மறைமுகமாகக் குறிப்பிட்டு அசோக் கெலாட் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது. அசோக் கெலாட் பேசியதற்கு ஆதரவாக அம்பிகா சோனி உள்ளிட்ட சில தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அசோக் கெலாட்டின் பேச்சு தனிப்பட்ட நபரைப் பற்றியது அல்ல, பொதுவான கருத்து என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்து சூடான கருத்துகளை அசோக் கெலாட்டுக்குத் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களும் வார்த்தைகளால் மோதிக்கொள்வதைப் பார்த்த ராகுல் காந்தி, தலையிட்டுச் சமாதானம் செய்து வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதை நோக்கி நகர்வோம். இப்போது நாம் மக்களின் பிரச்சினைகள், விவசாயிகள் போராட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலாலிடம், தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு வேணுகோபால், “கூட்டத்தில் எந்தக் கருத்து மோதலும் யாருடனும் ஏற்படவில்லை. சுமுகமாக காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்து முடிந்தது. குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம் ஆகியோர் அதிருப்தி தலைவர்கள் அல்ல. அவர்கள் மூத்த தலைவர்கள். உட்கட்சித் தேர்தல் தொடர்பாக எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x