மக்கள் பயமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: சுகாதாரத் துறை ஊழியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மக்கள் பயமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: சுகாதாரத் துறை ஊழியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
Updated on
1 min read

பொதுமக்கள் பயமின்றி கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்துவோர், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

2021-ம் ஆண்டு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியுள்ளது. இதன்மூலம் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவும், இதர உலகநாடுகளும் தங்களது போராட்டத் தைத் தொடங்கியுள்ளன. தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையைப் பெற்று உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கரோனாவைரஸ் தடுப்புக்கான முதல் கட்டதடுப்பூசி போட்டுக் கொண்டவர் கள், ஊசி போட்டுக் கொண்டதன்மூலம் ஒரு உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். அப்போதுதான் அவர்கள் அச்சமின்றி பணிகளில் ஈடுபட முடியும்.

இவ்வாறு மோடி பேசினார்.

அப்போது, வாரணாசியில் உள்ள பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வி.சுக்லா, காணொலியில் பிரதமர் மோடியுடன் பேசினார். தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பிரதமர் அப்போது அவரிடம் கேட்டார்.

அதற்கு டாக்டர் சுக்லா கூறும்போது, “கரோனா வைரஸைத் தடுக்க உதவும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் சுகாதாரத் துறை ஊழியர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர். வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதிலும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டறிந்து அதை செலுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பது பெருமையான விஷயம்” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, “டாக்டர்கள், விஞ்ஞானிகள் ஆகியோருடன் பல கட்டமாக ஆலோசனை நடத்திய பிறகே தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். இது அரசியல்ரீதியாக எடுத்த முடிவு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் மக்கள் பயப்பட வேண்டாம். அவர்கள் பயமில்லாமல் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். இந்த 2 தடுப்பூசிகளுமே பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன” என்றார்.

அப்போது ஹாத்திபஜாரைச் சேர்ந்த சுகாதாரத் துறை ஊழியர் ஷிருங்லா சவுகான், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதற்கு உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி என்று அவர் கூறினார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in