

தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுசமரசம் செய்து கொண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு தலைமை வகித்து சோனியா காந்தி பேசியதாவது:
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே ஒரு தொலைக்காட்சியின் நெறியாளர் (அர்னாப் கோஸ்வாமி), இதுதொடர்பான தகவல்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு இந்த தகவல்கள் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. சிலதினங்களுக்கு முன்பு இதுதொடர்பாக என்னிடம் பேசிய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தொலைக்காட்சி நெறியாளரின் இந்த செயல் தேச துரோக குற்றத்துக்கு சமமானது என்றார்.
ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர். தேச பக்திக்கும், தேசியவாதத்துக்கும் சான்றிதழ் வழங்குபவர்கள் இன்றுஇந்த விவகாரத்தில் அமைதி காக்கின்றனர். தேச பாதுகாப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு சமரசம் செய்து கொண்டுள்ளதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
வேளாண் சட்டம்
விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளிவிட்டு அவசரகதியில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டங்களை நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இரண்டு மாதங்களாக போராடி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசுமெத்தனப் போக்கையும், அராஜகப் போக்கையும் கடைபிடித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
உணவுப் பாதுகாப்பின் மூன்றுமுக்கியத் தூண்களான குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு கொள்முதல் மற்றும் பொது விநியோக நடைமுறையை இந்த புதிய வேளாண் சட்டங்கள் இல்லாமல் செய்துவிடும். எனவேதான், இந்தசட்டங்களை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
உட்கட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை
காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்தும் மத்திய பட்ஜெட் பற்றியும் உட்கட்சித் தேர்தல்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளின் கருத்தை சோனியா காந்தி கேட்டறிந்தார். ஏற்கெனவே, கட்சிக்கு முழு நேரத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கபில்சிபல், குலாம் நபி ஆசாத் உட்பட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்தி கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 4 மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன.
இந்தத் தேர்தல்களில் கட்சி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சியின் பிரச்சாரம் பாதிக்கப்பட கூடாது. எனவே, உட்கட்சித் தேர்தல்களை மே மாதம் பிற்பகுதியில் நடத்தலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதம் 15-ம் தேதியில் இருந்து 30-ம் தேதிக்குள் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.