ஹரியாணாவில் தலித் குடும்பத்தினர் மீது தீ வைப்பு- இரண்டு குழந்தைகள் பலி; இருவர் காயம்

ஹரியாணாவில் தலித் குடும்பத்தினர் மீது தீ வைப்பு- இரண்டு குழந்தைகள் பலி; இருவர் காயம்
Updated on
1 min read

ஹரியாணா மாநிலம் பரிதாப்பாத்தில் தலித் குடும்பத்தினர் மீது உயர் வகுப்பினர் கும்பல் தீ வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில் 2 குழந்தைகள் பலியாகினர்; இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பல்லப்கர் போலீஸ் உதவி ஆணையர் புபீந்தர் சிங் கூறும்போது, "பரிதாப்பாத்தில் உள்ளது சம்பெட் கிராமம். இங்கு வசிக்கும் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்தே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 3 மணியளவில், வீட்டினுள் 4 பேர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவர்கள் படுத்திருந்த கட்டில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதில் 2 வயது குழந்தை ஒன்றும், 10 மாத குழந்தை ஒன்றும் பரிதாபமாக எரிந்து கருகின. அக்குழந்தைகளின் பெற்றோர் தீக்காயங்களுடன் டெல்லி சாப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அவர்கள் வீடு எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை. வீட்டில் அவர்கள் படுத்திருந்த படுக்கையில் மட்டுமே தீ பிடித்துள்ளது. எனவே, சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்றார்.

பரிதாபாத் போலீஸ் ஆணையார் சுபாஷ் யாதவ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தலித் குடும்பம் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சன்பெட் கிராமத்தில் காலங்காலமாக ஆதிக்க சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருவதாகவும், கடந்த ஆண்டு இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in